திருப்புவனம் : திருப்புவனம், அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இக் கோயிலில் 5 நிலைகள் கொண்ட 71அடி உயரத்தில் ராஜகோபுர கட்டுமான பணி கடந்த 3 வருடங்களாக நடந்தது. திருப்பணி முடிந்து சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 4 ம் நாளான நேற்று யாகசாலை பூஜை முடிந்து சிவாச்சார்யார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை பத்து மணிக்கு ராஜாமணி , மணிகண்டன் சிவாச்சார்யார்கள் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அல்லிநகரம், அ.வெள்ளக்கரை, அ.முத்துபட்டி, அ.காலனி கிராம மக்கள், தெய்வீக பேரவை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.