பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த பண்டாரவேடு தொப்பையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளிப்பட்டு அடுத்த பண்டாரவேடு கிராமத்தில் பழமை வாய்ந்த தொப்பையம்மன் கோயில் உள்ளது. முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, கோயில் சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் ஆசியுடன் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 5 மணிக்கு யாக சாலை பூஜை, மகாபூர்ணாகுதி, யாத்ராதானம் ஆகியவை நடந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. கோயில் வளாகத்தை சுற்றி வந்து வினாயகர், தொப்பையம்மன், நவக்கிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், மகிஷாசுரமர்த்தினி அவதாரம் பற்றி ராஜராஜன், அம்மன் அருள் பற்றி மங்கையர்கரசியும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர். பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திருவீதியுலா நடைபெற்றது. திருப்பணிக் குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.