பதிவு செய்த நாள்
21
ஜூன்
2011
11:06
தஞ்சாவூர்: தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பெருமாள் கோயில்களில் 78ம் ஆண்டு பன்னிரு கருட சேவை மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 23 பெருமாள் கோயிலில்களிலிருந்து, கருட சேவை அலங்காரத்தில் பெருமாள் ஸ்வாமிகள் எழுந்தருளி, நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவோண தினத்தின் மறுநாள் பெருமாள் கருடசேவையில் காட்சி தருகிறார். திருமால் துதிபாடி திருமங்கையாழ்வாருக்கு காட்சி தரும் வகையில் கருட சேவை நடந்து வருகிறது. பெருமாளை தரிசித்தபடி அன்னவாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வர, அவரை தொடர்ந்து தஞ்சை வெண்ணாற்றாங்கரை நீலமேக பெருமாள், ஆண்டாளுடன் மற்ற பெருமாள்கள் கருட வாகனத்தில் வருவர். கருட வாகனத்தை பின் தொடர்ந்து பாகவதர்கள் பஜனைகள் பாடி வருவர். தொடர்ந்து, 23 பெருமாள் கோயில்களில் இருந்து கருட வாகனத்தின் மீது நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பின் அவரவர் கோயில்களுக்கு சென்று விடுவர். இதில் நீலமேக பெருமாள், மணிக்குன்ற பெருமாள், வீரநரசிம்மர் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், வேளூர் வரதராஜர், படித்துறை வெங்கடேசர், தெற்து வீதி கலியுக வெங்கடேசர், அய்யன் கடைத்தெரு பஜார் ராமர், பிரசன்ன வெங்கடேசர், கோவிந்தராஜர், ஜனார்த்தனர், கொண்டிராஜாபாளையம் யோகநரசிம்மர், கோதண்டராமர், கீழராஜவீத வரதராஜர், மேலவாசல் ரெங்கநாதர், மேலவீதி விஜயராம், நவநீதி கிருஷ்ணன், பள்ளியக்கரஹாரம் கோதண்டராமர், சுங்காந்திடல் லெட்சுமி நாரயாணர், கரந்தை யாதவ கண்ணன், மகர்நோன்புச்சாவடி வெங்கடேச பெருமாள், நவநீத கிருஷ்ணன் உட்பட 23 பெருமாள்களுடன் கருடவ வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இன்று, 23 பெருமாள்களும் நவநீத சேவையில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.