பதிவு செய்த நாள்
21
ஜூன்
2011
05:06
விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். அதாவது கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 20 கி,மீ,; பாண்டிச்சேரிக்கும் சுமார் 20 கி. மீ. தொலைவு. இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் கொண்டு, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் ஸ்ரீபடே சாஹிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜோதியாகப் பிரகாசித்தது. இவரது சந்திப்பிலேயே சகாயம் பெற்றார்கள், இவரைத் தேடி வந்தவர்கள்.
ஆசிர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த வியாதிகள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் நிரந்தரமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்றிருந்த வேளையில் சாஹிப்பை தீண்டிய கருநாகம் வந்து விஷத்தை அனைத்தும் எடுத்து விட்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து வணங்கி உயிர் விட்டது. அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான் அவர்கள். மேலும் திருடுவதையேக் குலத்தொழிலாக வைத்திருந்த திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் தருவார். நோயின் வீர்யம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.
படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் தீர்கின்றன என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் தருகிறார் பூசாரி. அங்கு இருக்கும் அனைவருக்கும் அது விநியோகிக்கப்படுகிறது. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அபூர்வ மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப். இவரது தரிசனத்தால் பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சி!