பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
10:06
தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு மாவட்டத்திற்கு 100 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 600 கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தப்படுகிறது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 37 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கோயில் மிகப் பெரிய கோயில்களாகும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட தமிழக முதல்வர் ஜெ.,அறநிலையத்துறை க்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் அதிகமான கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் ஜெ.,முதல்வராக பதவி ஏற்றவுடன் அறநிலையத்துறை புதிய புத்துயிர் பெறும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டிருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பல கோயில்களில் வருவாய் உள்ளிட்ட நிதி வசதி காரணமாக இந்த ஆண்டுகள் தள்ளிபோகும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆன õல் இனிமேல் தமிழகத்தில் 12 ஆண்டு முடிந்தவுடன் கோயில்களில் கட்டாயம் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஜெ.,உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு 100 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை இப்போதே தீவிர ஏற்பாடுகள் செய்து வருவதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதே போல் ஜெ.,கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டம் திமுக ஆட்சியில் முக்கியத்துவம் இல்லாத நிலையில் ஏதோ பெயர் அளவிற்கு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அன்னதான திட்டத்தையும் செம்மைப்படுத்தி கூடுதலான கோ யில்களின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட கோயில்களில் அன்னதான திட்டம் நடந்து வருகிறது. தற்போது புதியதாக 600 கோயில்களில் அன்னதான திட்டத்தை துவக்க அறநிலையத்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், குலசை முத்தாரம்மன் கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில், செட்டியாபத்து ஐந்துவீட்டு சாமி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் போன்ற கோயில்களின் அன்னதானம் திட்டம் செயல்பட்டு வருகிறது. புதிய அன்னதான கோயில்கள் புதியதாக வேம்படி இசக்கியம்மன் கோயில், கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில், எப்போதும்வென்றான் சோலைசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.