பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
10:06
செக்கானூரணி : மதுரை செக்கானூரணி அருகே கொங்கர்புளியங்குளத்தில் கி.மு., முதல் நூற்றாண்டில் சமணர்களால் உருவான "பிராமிக் கல்வெட்டுக்கள் பாதுகாப்பு இன்றி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன. இங்குள்ள குகையை சமூக விரோதிகள் கும்மாளமடிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். கொங்கர்புளியங்குளம் மலையில் உள்ள இயற்கையான குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட "கற்படுகைகள் உள்ளன. இம்மலையில் உள்ள குகையின் முகப்பில் மூன்று தமிழ் "பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு., முதல் நூற்றாண்டு. இவற்றை அமைக்க உதவியர்களின் பெயர்கள் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. சோழவந்தான் பகுதியில் உள்ள "பாகனூர் எனும் பண்டைய ஊர்ப்பெயரும் கூறப்பட்டுள்ளது. இதனருகே, கி.பி., 10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரரின் சிற்பம் ஒன்று வட்டெழுத்து கல்வெட்டுடன் காணப்படுவது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. "சமணர் பள்ளி எனும் பெயர் கொண்டு இம்மலையில் சமணர்களால் உருவாக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அருமையான சுற்றுலாத்தலம்: வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் வரப்பிரசாதமாக சமணர் பள்ளி உள்ளது. சுற்றுலா பயணிகள், இம்மலைக்கு சென்று கல்வெட்டுக்களை பார்க்கவும், குகைக்குள் உள்ள கற்படுகைகளில் படுத்து, ஓய்வெடுப்பதற்கு வசதியாக, மலையில் ஏறி செல்ல, அடிவாரத்தில் இருந்து படிக்கெட்டுக்களும், குகைக்குள் செல்ல, இருபுறமும் தடுப்புகளுடன் கூடிய இரும்பு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க, இயற்கையான காற்றை சுவாசிக்க, அருமையான சுற்றுலாத்தலமாக சமணர் பள்ளி விளங்குகிறது. சமூக விரோதிகள் அட்டகாசம்: சமணர் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. புளியங்குளம் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஒற்றையடி பாதையில் அரை கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும். இப்பாதையின் ஓரங்களில் கல் குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளன. கவனமாக செல்ல விட்டால் பள்ளத்தில் விழுவது உறுதி. பாதை வசதி இல்லாததால் சமணர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்கள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் குகையை, குடித்து விட்டு கும்மாளமடிக்கும் மையமாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர். கற்படுகைகளில் கைவரிசை: கற்படுகைகளில் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். உளியை எடுத்து வரலாற்று சின்னங்களை ஊனப்படுத்தியுள்ளனர். சமணர் பள்ளி குறித்து விளக்கும் பெயர் பலகையையும் சேதப்படுத்தியுள்ளனர். தொல்லியல் துறைக்கு சொந்தமான வரலாற்று காவியங்களை சேதப்படுத்துவோர் மீது தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவு 29ன் விதிப்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட் நடவடிக்கைக்கு உட்படுத்தி வேண்டும். சமணர் பள்ளியை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகள் செல்ல வசதியாக பாதை உட்பட அடிப்படை வசதிகளை தொல்லியல் துறையினர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.