பழநி : பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. பழநி மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம், பழநி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு பழநியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு மாரியம்மன் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தலும், தேரடி தேர்நிலையிலிருந்து மாலை 5.30 மணிக்கு அம்மன் தேரேற்றம் செய்யப்பட்டு மாலை 5.40 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது. தேரின்மீது பழங்களையும், நவதானியங்களையும் பக்தர்கள் வீசினர். கிழக்கு ரதவீதியிலிருந்து தெற்குரதவீதிக்கு செல்லும்போது மேடான இடத்தில் யானை கஸ்தூரி தேரை நகர்த்தியது. நான்குரத வீதிகளில் தேர்வலம் வந்து மாலை 6.45மணிக்கு தேர்நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தலும், வையாபுரி குளத்து அருகே வாணவேடிக்கையும், அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு வெள்ளிகாமதேனு வாகனத்தில் அம்மன் திருவுலாவும் நடைபெறும். இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் மாசிதிருவிழா முடிவடைகிறது.
* பக்தர்கள் அவதி: மாரியம்மன்கோயில் உள்ள கிழக்கு ரதவீதியில் இருபுறத்திலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாத காரணத்தால் தேரோட்டத்தின்போது நெரிசலில் சிக்கி அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் சிரமபட்டனர்.