பதிவு செய்த நாள்
14
மார்
2015
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. வரும் 16ம் தேதி மகா அபிேஷகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. கடந்த மாதம் 24ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; பிப்.,3ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், 6ம் தேதி முதல் வெளிபூவோடு துவக்க நிகழ்ச்சியும் நடந்தன. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள்; பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி, கடந்த 11ம் தேதி இரவு, 8:45 மணிக்கு துவங்கியது. முதல் நாளில், கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர்நிலை நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்டிருந்த தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இறுதி நாளான நேற்று, சத்திரம் வீதியிலிருந்து இரவு, 8:00 மணிக்கு மேல் புறப்பட்டு, தெப்பக்குளம் வீதி வழியாக தேர்நிலைக்கு வந்தடைந்தது. இதையொட்டி, சத்திரம்வீதி, தெப்பக்குளம் வீதி வழித்தடத்தில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் நிலைக்கு வந்ததையடுத்து, பரிவேட்டை நிகழ்ச்சியும்; கோவில் வளாகத்திலேயே சம்பிரதாயதுக்காக, தெப்பத்தேர் வைபவமும் நடந்தது. தொடர்ந்து, இன்று அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.