அயோத்தி மன்னர் தசரதர், மூத்த பிள்ளை ராமனுக்கு பட்டம் கட்ட முடிவெடுத்து, குரு வசிஷ்டரிடமும், அமைச்சர்களிடமும் எண்ணத்தை தெரிவித்தார். அமைச்சர் சுமந்திரர் மூலமாக ராமனை அழைத்து, மகனே! உனக்கு நாளையே பட்டம் சூட்டப் போகிறேன், என்றார். தம்பிகள் பரதனும், சத்ருக்கனனும் தாத்தாவின் நாடான கேகய தேசத்திற்குச் சென்றிருக்கும் நேரத்தில் பட்டம் கட்டிக் கொள்ள ராமர் விரும்பாவிட்டாலும், தந்தையிடம் அதை வெளிப்படுத்தவில்லை. அது மட்டுமல்ல! நாராயணனின் அவதாரமான அவர் உலகத்துக்கே ராஜாவாக ஏற்கனவே முடிசூட்டியிருக்கும் போது, ஒரு சிறு நாட்டுக்கு அதிபதியாக நினைப்பாரா என்ன! இருப்பினும், மனிதனாகப் பிறந்து விட்டதால், தந்தை சொல்லுக்கு சம்மதம் தெரிவித்தார். மறுநாள் அதே தந்தை, மகனைக் காட்டுக்குப் போகச் சொன்ன போது அதற்கும் சம்மதித்தார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகிலுள்ள இளைஞர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார்.