நாட்டரசன்கோட்டையில் சேங்கை வெட்டு விழா : மழைவேண்டி நேர்த்தி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 11:03
சிவகங்கை: பங்குனி விழாவை முன்னிட்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் ஊரணியில், ஐதீக முறைப்படி ‘சேங்கை வெட்டு’ எனும் மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை, நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா முன்னோட்டமாக காமராஜர் தெரு கண்ணாத்தாள் கோயிலில் பங்குனி விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக பெண்கள் மதுக்குடம் எடுத்து ஊர்வலமாக கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலுக்கு வந்து மதுக்குடத்தை அம்மன் சன்னதி முன் இறக்கி வைப்பர். பின்னர் ஏராளமான இளைஞர்கள் ‘சேங்கை வெட்டு’ எனும் ஐதீக முறைப்படி கோயில் ஊரணி குளத்தில் மண் எடுத்தனர். ஊரணியில் எடுத்த மண்ணை பெண்கள் சேலை முந்தானையில் வாங்கி கரையில் கொட்டினர். பின்னர் கோயிலில் தீர்த்தம் பெற்று மதுக்குடத்தை எடுத்துச் சென்ற பெண்கள் கோயில் முன் உள்ள இலுப்பமரத்தில் ஊற்றினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். முதல்கரை பூசாரி முனியாண்டி கூறுகையில்,“வைகாசியில் நடக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா சுபிட்சமாக நடக்கவும், நல்ல மழை செய்து கோயில் ஊரணி நிறைந்து பக்தர்கள் அம்மனை வேண்டி செல்ல மண் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுதவிர உலக அமைதி, குடும்பம் சுபிட்சம் பெற வேண்டியும் கோயில் ஊரணியில் ‘சேங்கை வெட்டு’நிகழ்ச்சி ஆண்டாண்டு காலமாக நடக்கிறது,” என்றார்.