பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பெங்களூரு கரக உற்சவம், நேற்று துவங்கி, ஏப்., 5ம் தேதி வரை நடக்கஉள்ளது.ஆண்டுதோறும், ஸ்ரீதர்மராயசாமி கோவிலில், கரக உற்சவம், 11 நாட்கள் நடக்கும். அர்ச்சகர் ஞானேந்திரா என்ற அர்ஜுனப்பா, கரக உற்சவத்தை நடத்துகிறார். இந்த கரகம் விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது.ஸ்ரீதர்மராயசாமி கரக உற்சவம், ஏப்., 3ம் தேதி நடக்கிறது. அன்று காலை, கரக உற்சவம் நடத்தி கொடுக்கும் பூஜாரிக்கு, மஞ்சள் நிற சேலை உடுத்தி, கப்பன் பூங்காவில் கரக குழியில் தேவிக்கு கங்கா பூஜை செய்யப்படும்.அங்கிருந்து பச்சை கரகத்தை மண்டபத்துக்கு எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்து, கோவிலுக்கு அழைத்து செல்லப்படும். நள்ளிரவு, 12:00 மணிக்கு தர்மராயசாமி கோவிலிலிருந்து புறப்பட்டு, ஊர்வலமாக சென்று, குலபுரோகிதரின் வீட்டில் பூஜையை ஏற்று, சூர்யோதய வேளையில், கோவிலை கரகம் வந்தடையும்.நேற்றிரவு கொடியேற்றம் துவங்கிய நிலையில், இன்று முதல், 30ம் தேதி வரை தினமும் காலை கங்கா பூஜை, 31ம் தேதி இரவு ஆரத்தி உற்சவம் நடக்கிறது. ஏப்., 1ம் தேதி, பச்சை கரகம்; 2ல், புராண கதாகாலட்சேபம், பொங்கல் சேவை; 3ம் தேதி இரவு, கரக உற்சவம்; 4ம் தேதி இரவு, பலி பூஜை; 5ம் தேதி இரவு, வசந்த உற்சவம் மற்றும் கொடி இறக்கத்துடன் முடிகிறது.