பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்., 4 ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 2.45 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை, என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் ஏப்., 3 முதல் பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது. ஏப்., 4 ல் சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. இதனால் கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணை கமிஷனர் ஞானசேகர், தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: வழக்கமாக முருகன் கோயில் காலை 5மணிக்கு நடை திறக்கப்படும். ஏப்., 4 ல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 க்கு விஸ்ரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 க்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, 10 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு பக்தர்களுக்காக சுவாமியும், அம்பாளும் திருவீதியுலா வருகின்றனர். மதியம் 2 க்கு சுவாமி கோயில் சேர்தல், விக்ரகங்களுக்கு பட்டு சாத்தப்படும். மதியம் 2.45 முதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின் இரவு 8 மணிக்கு மேல் வழக்கமான பூஜைகள் நடக்கும், என தெரிவித்தனர்.