பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
12:04
திருச்சி : திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, இன்று, வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. அன்று, மாவட்டம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு சிங்கார வேலர், வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.நேற்று முன்தினம் இரவு வள்ளிநாயகி, தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு, 8 மணிக்கு முருகன், வேடன் விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடந்தது.விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை, 11.45 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கதிரேசன் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.