பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
12:04
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இன்று அதிகாலை குண்டம் இறங்குகின்றனர். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த, 23ம் தேதி பூசாட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து, சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா புறப்பட்டது. சிக்கரசம்பாளையத்தில் துவங்கி புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் சென்று அங்கிருந்து, பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து, வெள்ளியம்பாளையம் புதூருக்கு வந்தது. கடந்த, 4ம் தேதி அம்மன் கோவிலை அடைந்தது. பின் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கடந்த, நான்காம் தேதி முதல், ஏராளமான பக்தர்கள் வரிசையில் குண்டம் இறங்குவதற்காக காத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை, 3 மணிக்கு அம்மை அழைத்தலும், குண்டம் முன் தலைமை பூசாரி சிறப்பு பூஜை செய்து, பூ, கனி ஆகியவற்றை வானத்தை நோக்கி இறைப்பார். பின், முதல் நபராக, தலைமை பூசாரி குண்டம் இறங்குவார். அவரை தொடர்ந்து பிற பூசாரிகளும், அடுத்து பக்தர்களும் வரிசையில் குண்டம் இறங்குவர்.குண்டத்தின் இரு புறமும், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் உட்பட முதலுதவிக்கான உபகரணங்களை வைத்துள்ளனர். விரதம் இருந்து, குண்டம் இறங்கும் பக்தர்கள், நேரடியாக சென்று மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.