வாலாஜாபாத்: கோவிந்தவாடி அகரம் ஏகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், பழமை வாய்ந்த ஏகாத்தம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் காலை 9:00 மணி அளவில், மகா கணபதி மற்றும் லட்சுமி ஆகிய ஹோமங்களுடன் முதல் கால பூஜையுடன், கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. பிற்பகல் 3:00 மணி அளவில், ஏகாத்தம்மன் சிலை கரிகோல ஊர்வலம்; வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் கும்ப அலங்காரம் நடந்தன. நேற்று காலை 7:00 மணி அளவில், இரண்டாம் கால யாக சாலை பூஜையும்; 9:45 மணி அளவில் கலச புறப்பாடும்; காலை 10:25 மணி அளவில், மேல தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, ஏகாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமவாசிகள் கலத்து கொண்டு, அம்மனை வணங்கி சென்றனர்.