பதிவு செய்த நாள்
08
ஏப்
2015
11:04
ராசிபுரம், :சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம், சாட்டையடி பெற்று ஸ்வாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 31ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்ரல், 2ம் தேதி இரவு, 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.அதை தொடர்ந்து, தினமும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவில் பூசாரி, பக்தர்களை சாட்டையால் அடிக்கும் வினோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, கோவில் பூசாரி அருள் பூவோடு எடுத்து வர, அவரை பின் தொடர்ந்து வந்த பக்தர்கள், கோவிலைச் சுற்றி வந்து பூசாரியிடம் சாட்டையடி பெற்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் சாட்டையால் கோவில் பூசாரி அருள் அடித்து ஆசி வழங்கினார். அதனால் நோய்கள், தீய சக்திகள் விலகி குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் பிரார்த்தனை நிறைவேறியவர்களும், பூசாரியிடம் சாட்டையடி பெற்றனர். பல ஆண்டு காலமாக, இந்த வினோத நிகழ்ச்சி நடந்து வருகிறது. காலை, 10 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று இரவு, 10 மணிக்கு அம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்., 8) அதிகாலை, 5 மணிக்கு, பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை செய்து ஸ்வாமியை வழிபடுகின்றனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து மதியம், 2 மணிக்கு, குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை (ஏப்., 9) காலை, 8 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், இரவு, 10 மணிக்கு சத்தாபரணம், ஸ்வாமி தீருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்ரல், 11ம் தேதி காலை, 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.