பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
ஈரோடு : அகஸ்தீஸ்வரர் கோவிலில், சித்திரை விழாவுக்கான ஏற்பாடுகள் ,துரித கதியில் நடக்கிறது. ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் உள்ளது, காங்கேயம் பாளையம். இங்கு, காவிரி ஆற்றின் நடுவே, அன்னபூரணியம்மாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பான, சித்திரை, 1ம் தேதி, இக்கோவிலில் லட்சார்சனை நடைபெறும்.சித்திரை விழாவை முன்னிட்டு, ஆற்றின் நடுவே பந்தல் அமைத்தல், சுற்றுப்புற பகுதியை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது. லட்சார்சனை, 11ம் தேதி துவங்கியது.இரு தினங்களாக சுவாமிக்கு அபிஷேகங்கள், ஆராதனை நடக்கிறது. சித்திரை, 1ம் தேதியான நாளை (14ம் தேதி) அதிகாலை, 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள், லட்சார்சனை பூஜை பூர்த்தி செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று, பல நூறு பக்தர்கள் வருகை புரிவர்.தமிழகத்தில் பிற கோவில்களில் இல்லாத வகையில், இங்கு சுவாமிக்கு கம்பங்கூழ் நைவேத்தியம் செய்யப்படுவதோடு, பிரசாதமாகவும் வழங்கப்படும்.நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக பரிசல்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட பக்தர்கள், ஆற்றின் நடுவே நடந்து சென்று சுவாமியை தரிசிப்பர்.
இதுகுறித்து, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் காந்தி கூறும் போது, அகத்தியர், தன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க, மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டார். தோஷம் நீங்கியதும், விசர்ஜனம் செய்ய முற்பட்டார். அப்போது, உலக மக்கள் வழிபாடு நடத்த வேண்டும்.விசர்ஜனம் செய்ய கூடாது என்று அசரீரி கூறியது. எனவே இக்கோவிலில் சித்திரை, 1ம் தேதி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.காவிரி துவங்கும் குடகில் இருந்து, 760 கி.மீ., பூம்புகாரில் இருந்து, 380 கி.மீ., தூரத்தில், அதாவது காவிரி நடுவே உள்ளது என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு நட்டாற்றீஸ்வரர் என்று பெயர் தோன்றியது என்பர்.அகத்தியர் கம்பை உருண்டையாக பிடித்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்ததாக ஐதீகம்.எனவே தான், தமிழ் வருட பிறப்பன்று வரும் பக்தர்கள் அனைவருக்கும், கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்படும், என்றார்.