பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
01:04
மேட்டுப்பாளையம் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், காரமடை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வனபத்ரகாளியம்மன் கோவிலில், காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி, அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சுவாமிநாதன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காரமடை அரங்கநாதர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜையும், 5:30 மணிக்கு கோ பூஜையும் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், மதியம் கோவில் நடை அடைக்காமல் திறந்தே இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.