உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உத்தமபாளையம் வடக்குத் தெருவில் உள்ள பகவதியம்மன் கோயில் விழாவில் சக்திகரகம் எடுத்து ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூகத்தினர் தினமும் நடத்திய மண்டகப்படி நிகழ்ச்சிகளை தொடர்ந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சக்தி கரகம் கோயிலை விட்டு புறப்பட்டது. சக்தி கரகத்தை சுற்றி காவு கொடுக்கும் பக்தர்கள் வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க, ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தர்கள் கோஷமிட முல்லையாற்றில் சக்தி கரகம் கரைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அக்னிசட்டி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது.