பதிவு செய்த நாள்
18
ஏப்
2015
11:04
பவானி: பவானி, தேவபுரம் கருமாரியம்மன் கோவில், 14ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவானி, தேவபுரம், டெலிஃபோன் ஆஃபிஸ் எதிரே உள்ள ரோட்டில், கருமாரியம்மன், பண்ணாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கணபதி, முருகன் கோவில்கள் சார்பில், கடந்த, 14ம் தேதி திருவிழா துவங்கியது. அன்று, கூடுதுறை சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தி, மஹா தீபாராதனை நடந்தது. 15ம் தேதி மாவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், அக்னிச்சட்டி ஊர்வலம், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 108 திருவிளக்கு பூஜை சங்கமேஸ்வரர் கோவில் குருக்கள் பாலாஜி சிவம் தலைமையில் மந்திரங்கள் முழங்க நடந்தது. நேற்று காலை, கோவில் முன் இருந்த கொடிகம்பம், காவிரி ஆற்றில் விடப்பட்டது. மாலை, 6 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடைந்தது. நேற்று நடந்த திருவிழக்கு பூஜையில், தர்மகர்த்தா மாதுசாமி, தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் கண்ணன், விழா கமிட்டியினர் மாதேஸ்வரன், முருகேசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.