துறவி என்பவர் எந்த பொறுப்பும் இல்லாதவர். ஆன்மிகத்தை தவிர வேறெதிலும் நாட்டம் இல்லாதவர். சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்பவர் என பலர் நினைப்பதுண்டு. எத்தனை பெரிய ஞானிகளாக இருந்தாலும் சமுதாயத்துக்கும் பாரத பண்பாட்டுக்கும் ஆபத்து என்ற போது சமுதாயத்தில் இறங்கி வேலை செய்துள்ளனர். தமிழகத்தில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஏற்படுத்திய பக்தி இயக்கத்தை தொடர்ந்து பல்லவ, சோழ பேரரசுகள் ஏற்பட்டன. இவற்றால் பாரத பண்பாடு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது. அன்னிய படையெடுப்பு தட்சிண பாரதத்தை தாண்டாமல் ஒரு அரணாக உருவானது விஜயநகர பேரரசு. அதனை நிறுவிய ஹரிஹரபுக்கர்கள் அத்வைத ஞானியான வித்யாரண்யரால் உருவாக்கப்பட்டவர்கள். வட இந்தியாவில் பக்தி மார்க்கத்தை ராமானுஜரின் பாரம்பரியத்தில் வந்த ராமானந்தர் பரப்பினார். ராமனந்தரின் சீடரான கபீர் அதை பெரிய அளவில் வளர்த்தார். குரு நானக் இந்த பக்தி மரபின் ஒரு உச்சமாக விளங்கினார். அவரால் சீக்கிய மார்க்கமும் அதன் விளைவாக கால்சா அமைப்பும் உருவாகின. இதனைத் தொடர்ந்து சீக்கிய பேரரசு உருவாகியது. மகாராஷ்டிரத்திலும் பக்தி இயக்கத்தின் விளைவாக மராட்டா சாம்ராஜ்யம் உருவானது.
பாரதத்தின் விடுதலை போராட்டமே ஒருவிதத்தில் ஆன்மிக இயக்கமான ராமகிருஷ்ண விவேகானந்த ஞான மரபிலிருந்து உருவானதுதான். வங்க எழுச்சி, பாரதியின் பாடல்கள், மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம் இவை அனைத்திலும் விவேகானந்த வேதாந்த மரபின் தாக்கத்தையும் தூண்டுதலையும் காணலாம். இன்று ராமேஸ்வரம் கோயில் தலை நிமிர்ந்து நிற்க அப்படி ஒரு துறவியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அவர் தாயுமானவர். திருச்சிராப்பள்ளியின் அரசராக ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்தவர் அவர். பின் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு துறவியாக மாறி மிக எளிய தமிழில் உயர்ந்த ஆன்மிக கருத்துகளை மக்களுக்கு அளித்தவர். பிரபலமான எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற பாடல் வரிகள் அவருடையவை. போர்த்துகீசியர் ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்ட காலகட்டம் அது. அவர்கள் இலங்கையில் உள்ள பல கோவில்களை இடித்து தள்ளினர். அங்கெல்லாம் தங்கள் கோட்டைகளைக் கட்டினர். இதே நோக்கத்துடன் தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் மீதும் அவர்கள் கண்கள் திரும்பின. ராமநாத சுவாமி ஆலயத்தை இடித்து அங்கே கோட்டை கட்ட திட்டமிட்டனர். ராமேஸ்வரத்தை தாக்கினர். ஆலயத்தின் பல பகுதிகளை சேதப்படுத்தினர். இந்த காலகட்டத்தில் ராமநாதபுரத்தில் துறவியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார் தாயுமானவ சுவாமிகள். இந்த கொடுமைகளை அவர் கேட்டார். சேதுபதியுடன் இணைந்து உடனடியாக மதுரை நாயக்கரிடம் இந்த ஆபத்தை விவரித்தார். இதனையடுத்து மதுரை நாயக்கர் ஒரு படையை அனுப்பினார்.
தொல்லியல் துறை வெளியிட்டுள்ள இராமேசுவரம் எனும் நூலில் இந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரம் இவ்விதமாக கூறப்பட்டுள்ளது: நாயக்கர் வித்தலா என்பவரின் தலைமையில் படையை அனுப்பி அதை ஒழுங்குபடுத்தினார். இதில் தாயுமானவரும் படையைத் திரட்டி அதற்கு தானே தலைமை ஏற்றும் சென்றார். மேலும் வித்தலா தனது திறமையால் டச்சுக்காரர்களிடமிருந்தும் கோயிலைக் காப்பாற்றியிருக்கின்றார்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மிகத்தையும் சமரச சன்மார்க்கத்தையும் வாழ்க்கையாக கொண்டிருந்த துறவி தாயுமானவர். நம் நாட்டின் பண்பாட்டு ஆன்மிக சின்னமாக விளங்கிய ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்ட போது, பாதுகாப்புகளை செய்ததுடன், தானே படைக்கு தலைமை தாங்கியும் சென்றார் என்பது போற்றுதலுக்கு உரிய விஷயம். - சுப்பிரமணிய பிள்ளை, பேராசிரியர் (ஓய்வு)