குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் எல்லாம் வல்ல இறைவனின் மகத்துவமும் பேருண்மையும் குறித்த தகவல் முதன்முதலில் சென்றடைய வேண்டும். அதன் வலது காதில் அதான் எனப்படும் பாங்கும், இடது காதில் இகாமத் எனப்படும் தொழுகைக்கு நிற்கும் முன் முஅத்தின் சொல்லும் பிரார்த்தனையையும் சொல்ல வேண்டும். இதன் மூலம் வலிப்பு நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் நபிகள் நாயகம். ஷைத்தான் மனிதனை நேர்வழியில் இருந்து பிறழச் செய்வதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து பதுங்கி அமர்ந்திருக்கிறான். ஆனால், பாங்கொலி கேட்டவுடன் அங்கிருந்து ஓடி விடுகிறான். ஷைத்தானின் அழைப்பு குழந்தையைச் சென்றடையும் முன்பாக, இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதற்காக அழைக்கும் இந்த அழைப்பு, குழந்தையை முதலில் சென்றடைந்து விடுகிறது.மனிதன் பிறக்கும்போது, எந்த பேருண்மை அவனுக்குச் சொல்லப்படுகிறதோ, அதை அவன் கடைபிடித்து வாழ்வதற்கும் இத்தகைய தகவல்கள் சொல்லப்படுகிறது.