ஒரு மாணவன் ஆலயத்திற்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய புது பைபிளைக் கொண்டு செல்வான். ஆனால், ஒருநாளும் அதை திறக்க மாட்டான். சபை போதகர் ஒருநாள் அவனிடம், ஏன் இப்படி செய்கிறாய்? என்றார். மாணவன் அவரிடம், ஐயா! தினமும் திறந்தால் இது அழுக்காகி விடும் என்றான். அவன் அன்று புதிதாக செருப்பு அணிந்திருந்தான். இனி ஒருநாளும் இந்த செருப்பை போடாதே. அழகான இந்த செருப்பில் மண் ஒட்டிக் கொள்ளுமே! என்றார். மாணவனோ, ஐயா! செருப்பு போடுவது கால்களுக்கு பாதுகாப்பு. மண் ஒட்டினால் என்ன! என்றான்.போதகர் சிரித்தபடி, புதுசெருப்பு என்பதற்காக போடாமல் வைத்திருந்தால் கால்களுக்கு பாதுகாப்பில்லை. அதுபோல, பைபிளை வாங்கி புத்தம் புதிதாக வைத்திருந்தால் உன் வாழ்வுக்கே பாதுகாப்பு இல்லை. வாசிப்பதற்காகத் தான் தேவன் நமக்கு எழுதி வைத்துள்ளார். வேதத்தை வாசித்து அந்த வசனங்களை இருதயத்தில் வைத்துக் கொள். அதுவே வாழ்க்கை முழுவதற்கும் பாதுகாப்பு என்று சொல்லி அனுப்பி வைத்தார்.இதைப் போல பலர் வீடுகளில் வேதத்தை வாங்கி வைக்கின்றனர். ஆனால், எத்தனை பேர் இருதயத்தில் வசனத்தை வைத்திருக்கிறார் என்று ஆய்வு செய்தால் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. வேத வசனத்தைப் பின்பற்றி நடந்தால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வேதம் சொல்கிறது(சங்.1:2) உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்(சங்.119:18) என்பது இன்னொரு வசனம்.வேதம் தேவனால் நமக்கு எழுதப்பட்ட அன்பின் கடிதம். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கர்த்தருடைய வார்த்தை ஒழிந்து போகாது. அப்படிப்பட்ட வேதத்தை அன்றாடம் வாசியுங்கள். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருக்கிறது.