மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: 12 ஆயிரம் பேர் காண ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2015 01:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்தை 12 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக காணவும், 250 டன் திறன் கொண்ட ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளது, என கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சித்திரை திருவிழா காண வரும் பக்தர்களுக்கு கிழக்கு சித்திரை வீதியில் நிழற் பந்தல், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏப்., 30 மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி வடக்காடி வீதி திருக்கல்யாண மேடை 10 லட்சம் பூக்களால் அலங்கரிக்கப்படும். கட்டணம் இன்றி தெற்கு கோபுரம் வழியாக ஆறாயிரம் பக்தர்களும், ரூ.200 கட்டணம் செலுத்துவோர் வடக்கு கோபுரம் வழியாகவும், ரூ.500 செலுத்துவோர் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணத்தை 12 ஆயிரம் பேர் நேரடியாக காணவும், 250 டன் திறன் கொண்ட ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் பத்து எல்.இ.டி., டிவிக்கள் வைக்கப்படும். மூன்று இடங்களில் பிரசாத கவுண்டர்கள், திருக்கல்யாண மொய் பணம் செலுத்த வசதியாக 15 கவுண்டர்கள் செயல்படும். கோயில் சார்பில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. தனியார் அமைப்பு சார்பிலும் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது என்றார். இணை கமிஷனர் நடராஜன், அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.