பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
01:04
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 7 சுவாமி சிலைகளை கொள்ளையடித்தது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் 7 சுவாமி சிலைகள் திருடு போயின. இக்கோயிலில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.50 மணிக்கு கடைசி பூஜை நடக்கும். சிலை திருட்டு சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவு 7.45 மணிக்கு, 3 வாலிபர்கள் அர்ச்சனை செய்ய கோயிலுக்குள் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியே சென்றுள்ளார். மற்ற இருவரும் கோயிலுக்குள் பதுங்கி இருந்துள்ளனர். வெளியே சென்றவர் நள்ளிரவில் யாரும் வருகிறார்களா என கண்காணித்து கொண்டிருக்க, கோயிலுக்குள் பதுங்கி இருந்த இருவரும் உள் அறை கதவின் பூட்டை உடைத்து, சிலைகளை திருடிக்கொண்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து தப்பிச் சென்று இருக்கலாம், என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கோயிலில் ஜூன் 29 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் யாருக்காவது இக்கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், உள்ளூர் நபர்கள் யாராவது கொள்ளையர்களுக்கு உடந்தையாக உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கும்பாபிஷேகத்தின் போது ஊர்வலத்திற்கு சுவாமி சிலைகள் தேவைப்படும் நிலையில்,அவை திருடுபோனதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். இன்னும் 2 மாதத்திற்குள் புதிய சிலைகள் தயார் செய்ய வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், நேற்று காலை எஸ்.பி.,மயில்வாகனன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில்,"டி.எஸ்.பி., சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சிலை திருடர்கள் கைது செய்யப்படுவார்கள்,” என்றார்.