வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2015 01:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்திய நாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு வந்து சுவாமியை வழிபட்டால் நோயற்ற வாழ்வு, நிறைந்த செல்வத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட 96 ஊர்களை சேர்ந்தவர்கள் ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாதர் சுவாமியை குல தெய்வமாக வழிபடு வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முழுவதும் விரதமிருந்து சித்திரை முதல்வாரம் கீழச்சிவல்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு 2 வது வாரம் செவ்வாய் கிழமை வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இவ்வாண்டு கடந்த வாரம் புதன் கிழமை புறப்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர் எல்லையில் தங்கினர். தொடர்ந்து செவ்வாய் கிழமையான நேற்று காலை வந்து குளத்தில் நீராடி கோயிலை வலம் வந்து தாங்கள் வழித்துனைக்காக கொண்டுவந்த கம்புகளை கோயில் கொடி மரத்தில் போட்டனர். பின்னர் நேர்த்தி கடன் செலுத்தி சுவாமி, அம்பாள் மற்றும் அங்காரகனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சீர்காழி டி. எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.