பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு தேரோட்டம், மகா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம், நடராஜர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, வரும் 1ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சித்சபையில் இருந்த நடராஜர், தேவசபைக்கு பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8ம் தேதியன்று நடந்தது. வரும் 30ம் தேதியன்று இரவு, தேவசபையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சித்சபைக்கு நடராஜர் மீண்டும் பிரவேசம் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும் 1ம் தேதியன்று, காலை 7:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் முடிந்தவுடன், சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் கனசபையில் எழுந்தருளுகிறார். இதை தொடர்ந்து, 2ம் தேதி காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், திருத்தேரில் நடராஜர் எழுந்தருள, தேரோட்டம் துவங்குகிறது. மாலையில், தேர் நிலையை வந்தடைகிறது. பின், அஜபா நடனத்துடன், ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சுவாமி எழுந்தருளுகிறார்.வரும் 3ம் தேதியன்று அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகம், 6:00 மணிக்கு, தங்க காசு சொர்ண அபிஷேகம் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு, நடராஜர் ஆனந்த நடனமாடியபடி, மகா தரிசனம் காட்சியும், சித்சபை பிரவேசமும் நடக்கிறது. இந்த ஆண்டில், கடந்த ஜனவரியில், மார்கழி ஆருத்ராவையொட்டி, தேரோட்டமும், மகா தரிசனமும் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகத்தையொட்டி, 2வது முறையாக, சிறப்பு தேரோட்டம், மகா தரிசனம் நடப்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜூன் மாதத்தில் ஆனி திருமஞ்சனம், டிசம்பர் மாதத்தில் மீண்டும் மார்கழி ஆருத்ரா உற்சவத்தையொட்டி, தேரோட்டம் மற்றும் மகா தரிசனம், என, நடப்பாண்டில் நான்குமுறை தேரோட்டம், மகா தரிசனம் நடக்க உள்ளது தனி சிறப்பாகும்.