பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை பராமரிப்பில் உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.மூன்றாம் நாள் விழாவான அறுபத்து மூவர் திருவிழாவில், நேற்று காலை, 7:00 மணியளவில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நாயன்மார்கள், 24 பல்லக்குகளில் வேதகிரீஸ்வரர் மலையை வலம் வந்தனர்.அறுபத்து மூவரை தொடர்ந்து, விநாயகர், அதிகார நந்தியில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 24 பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த சுவாமிகளை பார்த்து வணங்குவது போன்று வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அறுபத்து மூன்று நாயன்மார்கள் மலையையும், மாடவீதிகளிலும் உலா வருவது, திருக்கழுக்குன்றத்தில் மட்டும் தான் என்பது சிறப்பு வாய்ந்தது. காலை, 5:00 மணியளவில் துவங்கி, நாள் முழுக்க மலையை வலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.