பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
கோயம்பேடு: கோயம்பேடு திரவுபதி அம்மன் கோவிலில் எட்டாம் ஆண்டு பூ மிதி திருவிழா, ஏப்., 29ல் துவங்குகிறது. கோயம்பேடு, 127வது வார்டு அண்ணா தெருவில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில், ஏப்., 29 முதல், மே 3 வரை, பூ மிதி திருவிழா நடக்கிறது. 29ல், காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6:00 மணிக்கு மேல், பால்குடம் எடுப்பவர்கள், பூக்குழி இறங்குபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். அதேபோல், அடுத்தடுத்த நாட்கள், காலை மற்றும் மாலையில், பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன. நிறைவு நாளான மே 3ல், காலை 7:00 மணிக்கு, வேண்டுதல் உள்ளவர்கள் நிர்வாகத்தை அணுகி, பம்பை உடுக்கை வர்ணனையோடு அலகு போடலாம். மாலை 6:00 மணிக்கு மேல், பாரதியார் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் அலங்கரித்து, திருவீதி வழியாக வந்து, இரவு 7:00 மணி அளவில், பூக்குழி இறங்குதல் நடைபெறும். இரவு 9:00 மணி அளவில், மங்கள வாத்திய இசை, வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.