பதிவு செய்த நாள்
02
ஜூலை
2011
10:07
ஜம்மு: காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க, பால்தால் வழியாக பக்தர்கள் செல்வது, மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பகல்காம் பாதையில் பக்தர்கள் செல்வது தொடர்கிறது. காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு பனி லிங்கத்தை தரிசிக்க, இதுவரை 2.50 லட்சம் பேர், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான பனி லிங்க தரிசன புனித யாத்திரை, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதுவரை மூன்று குழுக்கள், தங்கள் பயணத்தை துவங்கி உள்ளன. இந்நிலையில், ஜம்மு பக்வாதி நகர் முகாமில் இருந்து நேற்று காலை நான்காவது குழு யாத்திரையை துவங்கியது. இதில், 1,438 ஆண்கள், 468 பெண்கள், 94 குழந்தைகள், 304 சாதுக்கள் என 2,303 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 37 ஆயிரம் பக்தர்கள், பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கடும் மழையால் பால்தால் பாதை வழியாக, பக்தர்கள் அமர்நாத் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பகல்காம் பாதையில் பக்தர்கள் செல்வது தொடர்கிறது.