பதிவு செய்த நாள்
02
ஜூலை
2011
10:07
வேலூர்: வேலூர் அருகே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தவாடி கிராமத்தல் விவசாயி காசிநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீர்செய்த போது கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலை, 130 செ.மீ., உயரமும், 49 செ.மீ., அகலமும், 22 செ.மீ., கனமும் கொண்ட இந்த கற்சிலை, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் என தெரிந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவுபடி இந்த சிலை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
அருங்காட்சிய காப்பாட்சியாளர் சரவணன் கூறியது: இந்த கற்சிலை வீரக்கல் சிலையாகும். நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் வீரமாக போரிட்டு உயிர் நீத்த படைத் தலைவனுக்காக செதுக்கப்பட்டிருக்கலாம். படைத்தலைவன் தன் மனைவியுடன் நின்ற நிலையில் சிலையில் காணப்படுகின்றது. படைத்தலைவன் வலது கையில் கத்தியுடனும், இடது கையில் வில்லுடனும் காணப்படுகின்றார். நாயக்க மன்னர்களுக்கான அழகான கொண்டையுடன் உள்ளார். அனரது மனைவி வலது கையில் மலரையும், இடது கையை தொங்கவிட்டபடியும், அழகிய ஆடை ஆபரணங்களுடன் சிலை உள்ளது. புடைப்பு சிற்பமாக காணப்படும் இந்த சிலை, 500 ஆண்டுகள் பழமையானது. நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தை சேர்ந்தது. கி.பி., 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த சிலை தற்போது வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.