கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்தகிரி முதல் தெருவில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்தல், பொங்கலிடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏப்.,21 ல் கொடியேற்றம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினசரி ஒவ்வொரு பகுதியிலும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின், அலங்கரிக்கப்பட்ட மண்டகப்படிகளுக்கு அம்மன் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பக்தர்கள் கையில் காப்புக் கட்டி அம்மனுக்கு விரதமிருந்து தீச்சட்டிகளை ஏந்தி அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் பலர் நீளமான அலகு குத்தி, பறவை காவடி எடுத்து வேண்டுதல் செலுத்தினர். ஆனந்தகிரி இளைஞரணி சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மே 12ல் அம்மனுக்கு மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம், அன்னதானம் நடைபெறும். கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.