வீரபாண்டி திருவிழா நாளை துவக்கம் சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., பாஸ் கிடையாது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2015 11:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்குகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை முதல் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. விழா நடக்கும் ஒரு வாரத்தில் தினமும் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்வார்கள். பல ஆயிரம் பேர் அக்னி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விரிவான ஏற்பாடுகள்: கம்பம், சின்னமனூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெற்கு பகுதியிலும், பெரியகுளம், தேனி போடி பகுதி வாகனங்களுக்கு ஆவின் பூத் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் இடத்தில் பொழுதுபோக்கு ராட்டினம், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முடிக்காணிக்கை செலுத்த நபருக்கு ரூ.10க்கு டோக்கன் வழங்கப்படும். 100 நாவிதர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்த ஆண்டு சிறப்பு தரிசனம், தனி வழி கிடையாது. ஆனால் விரைவு தரிசன டிக்கெட் ரூ.20க்கு வழங்கப்படும். வி.ஐ.பி., பாஸ், கார் பாஸ் இல்லை. கோயில் வளாகத்திற்குள் 22 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கி -டாக்கி: திருவிழா பணியில் ஈடுபடும் 150 பணியாளர்களை 2 கி.மீ., சுற்றளவில் கண்காணித்து உடனுக்குடன் சுகாதாரம், குடிநீர் வசதி மேம்படுத்த "வாக்கி டாக்கி வசதி செய்துள்ளனர். 20 இடங்களில் கண்காணிப்பு காமிரா வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியும், ரோட்டோரத்திலும் 200 தற்காலிக கடைகள் அமைக்கப்படுகிறது. திருவிழா பணியில் ஈடுபடும் பொது சுகாதார பணியாளர்கள், போலீசார், அறநிலையத்துறை ஊழியர்கள் ஆயிரம் பேருக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக எட்டு நாட்களும் ஆற்றில் 150 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. மே 15ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடக்கிறது. எனவே அன்று மாவட்டத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.