பதிவு செய்த நாள்
15
மே
2015
12:05
கிருஷ்ணகிரி: சபரிமலையில் இருந்து, காசிக்கு நடைபயணம் செய்யும் பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கேரள மாநிலம், சபரிமலையை அடுத்த, பந்தளம் பகுதியை சேர்ந்தவர் மணி. ஐயப்ப பக்தரான இவர், கடந்த, 56 ஆண்டுகளாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார். குருசாமியான இவரும், இவரது மனைவி சரசம்மாவும், கடந்த பிப்ரவரி 22ம் தேதி, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப ஸ்வாமியுடன், சபரிமலையில் இருந்து காசி நோக்கி நடைபயணத்தை துவங்கினர். திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக, நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியை வந்தடைந்தனர். அவர்களுக்கு, ஐயப்ப பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று அதிகாலை, 4 மணியளவில், காசி நோக்கி புறப்பட்டனர். திருப்பதி வழியாக பல மாநிலங்களை கடந்து காசிக்கு செல்ல இருப்பதாக, ஐயப்ப பக்தர் மணி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தீவிர ஐயப்ப பக்தரான நான், அவரது புகழை வெளிப்படுத்தும் விதமாக, எனது மனைவியுடன் புனித பயணம் மேற்கொள்கிறேன். காசி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளை சென்றடைய இன்னும் நான்கு ஆண்டுகளாகி விடும். இதுபோன்ற ஆன்மிக பயணம் மேற்கொள்வதன் மூலம், நானும் எனது மனைவியும் மனநிறைவு அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.