பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நாளை மாலை, 5.15 மணிக்கு நடக்கிறது. கரூர் மாரியம்மன் கோவிலில் கடந்த, 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், நேற்று அதிகாலையில் இருந்து, ஐந்து ரோடு அமராவதி ஆற்றங்கரை, வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்து, குழந்தையை தொட்டில் கட்டியும், தீர்க்குடம் எடுத்து வந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்களும் பல விதமான அலகுகளை குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு படைத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக நீண்ட வரிசையில் கோவிலுக்கு சென்று, அம்மனை வழிபாடு செய்தனர். வழிபாடு குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நாளை மாலை, 5.15 மணியளவில் நடக்கிறது. தொடர்ந்து, புஷ்பம், கருடன், மயில், கிளி, வேப்ப மரம், பின்ன மரம், புஷ்பம், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, மாரியம்மன் பல்லக்கு ஆகிய வாகனங்களில் நாள்தோறும் ஒன்றில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.