பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
அவிநாசி : திருமுருகன்பூண்டி கோவில், கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் நேற்று துவங்கின; நாளை பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், வரும் 29ம் தேதி மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதற்காக, பிரதான மூர்த்தியான திருமுருகநாத சுவாமிக்கு, உத்தமபட்சமாக 33 குண்டங்களும், அம்பாளுக்கு நவாக்னி எனப்படும் ஒன்பது குண்டங்களும், ஸ்ரீ சண்முகநாத சுவாமிக்கு ஒன்பது, நடராஜ பெருமானுக்கு ஐந்து மற்றும் சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார், காலபைரவர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு 25 குண்டங்கள், என 81 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 10:30 மணிக்கு, யாக சாலை அலங்காரம், சிவாக்னி சங்கிரஹனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, ரக்ச பந்தனம், கும்ப அலங்காரம், யாத்ர ஹோமம், மூலாலய மூர்த்திகள் யாக சாலை பிரவேசம் மற்றும் யாக சாலை பூஜைகள் துவங்கின. திரவியங்கள், மூலிகைகள் என 108 பொருட்களால், வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தினர். முதற்காலை யாக பூஜை நிறை வேள்வியுடன் நேற்று இரவு நிறைவடைந்தது.
இன்று காலை 7:15 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நிறை வேள்வியும், மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (28ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு, பரிவார யாக சாலை பூஜை துவக்கம், நிறை வேள்வி, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. அதன்பின், நான்காம் கால யாக பூஜையும், மாலை 5:30 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது. வரும் 29ம் தேதி, அதிகாலை முதல் ஆறாம் கால யாக பூஜை, யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடக்கிறது.அன்று காலை 9:05 மணிக்கு, விமானம், கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:15 மணிக்கு, மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், தச தானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 திருக்கல்யாண உற்சவமும், ரிஷப வாகன காட்சியும் நடைபெறுகிறது.