பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
உசிலம்பட்டி: ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் நடக்கவிருந்த மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் பெருங்கும்பிடு, கிடாவெட்டு திருவிழாவிற்கு தாசில்தார் கஜேந்திரன், டி.எஸ்.பி., சரவணக்குமார் தடைவிதித்தனர். இக்கோயிலில் ஜூன் 5,6,7ல் பெருங்கும்பிடு அல்லது கிடா வெட்டு திருவிழாவினை நடத்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட எட்டும் இரண்டும் பத்து தேவர்கள், ஐந்து பூஜாரிகள், அய்யனார்குளம் அக்கா மக்கள் இணைந்து முடிவு செய்திருந்தனர். முதன்மை கொடுப்பது, முதன்மை வாங்குவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மூன்று மாதங்களுக்கும் மேலாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவுபடியும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கஜேந்திரன், டி.எஸ்.பி., சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் துரை.சுப்பிரமணியம், எட்டுத்தேவர் சார்பில் பெரியதேவர், இரண்டு தேவர் சார்பில் கீரித்தேவர், அய்யனார்குளம் அக்கா மக்கள் சார்பில் ஊராட்சித் தலைவர் சுதாகர், பூஜாரி பிரதிநிதி கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணமாக வைத்து பெருங்கும்பிடு திருவிழாவிற்கு தாசில்தார், டி.எஸ்.பி., தடைவிதித்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.