பதிவு செய்த நாள்
06
ஜூலை
2011
11:07
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது. யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் 2007ல் பாலாலய பூஜைகளுடன் துவங்கப்பட்டது. கருங்கல் தூண்கள், மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டிருந்தவை மாற்றி அமைக்கப்பட்டன. கோபுரங்கள், சிற்பங்கள், மகாமண்டபங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. மூலவர் பரமசாமி சன்னதி தங்க விமானம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் பிரிக்கப்பட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், 25 கிலோ தங்கத்தில் முலாம் பூசப்பட்டது. இதுதவிர பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த நிலையில் ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதான ஹோமம், பஞ்சாக்கினி, பத்ம குண்டம் உட்பட 52 யாக குண்டங்கள்,45 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரநாராயண பட்டாச்சாரியார் தலைமையில் அழகர்கோவில், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்புல்லாணி, திருக்கோஷ்டியூர், திருவல்லிக்கேணி ஆகிய திவ்யதேசங்களை சேர்ந்த 75 ஆச்சார்யார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 200 அத்யாபகர்கள் கலந்து கொண்டு திவ்யபிரபந்தம் பாராயணம் செய்கின்றனர். வேதபாராயணம், இதிகாச புராண பாராயணம், சந்தபாகு ஸ்தபசு பாராயணம், சுதர்ஷன சதகபாராயணம் ஆகியவை செய்யப்படுகின்றன. இன்று மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுதர்ஷன் உத்தரவின்படி, நிர்வாக அதிகாரி செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.