சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் 7ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 11:05
செஞ்சி: சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் 7ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. செஞ்சி தாலுகா சிங்கவரத்தில் மலை மீது பழமை வாய்ந்த பல்லவர் கால ரங்கநாதர் கோவில் உள்ளது. இக் கோவிலில் இருந்த தேர் 80 ஆண்டுகளுக்கு முன்பு சேதமானது. இதற்கென மீண்டும் புதிய தேர் வடிவமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை மூலம் 11.50 லட்சம் ரூபாயும், கிராம நிதியாக 8 லட்சமும், பொதுமக்கள் நன்கொடையும் சேர்த்து 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 அடி உயரத்தில் புதிதாக தேர் வடிவமைத்துள்ளனர். இப்பணிகள் நிறைவடைந்திருப்பதால் அடுத்த மாதம் 7ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்த உள்ளனர். தேரோட்டம் நடக்க உள்ள மாட வீதிகளில் சாலையை அகலப்படுத்தியும், இடையூறாக இருந்த மின் கம்பங்களை ஓரமாக நகர்த்தியும் சாலைகளை ஒழுங்குபடுத்தி உள்ளனர். தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.