பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், உத்தமர் கோவிலில் வைகாசி தேர் திருவிழா நடந்தது. மும்மூர்த்திகள், தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க ஸ்தலமாக விளங்கும் உத்தமர் கோவில், சப்த குருக்களும் எழுந்தருளியுள்ளதால், சிறந்த குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு, வைகாசி மாதம் விசாக நடசத்திரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த, 22ம் தேதி காலை, 11.15 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் சூரிய பிரபை, பூத வாகனம், சேஷ வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் ஸ்வாமி புறப்பாடு நடைபெற்றது.கடந்த, 29ம் தேதி பகல், 12 மணிக்கு ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நேற்று காலை, 10.35 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. கோவிலை சுற்றி வந்த தேர் நிலையை அடைந்தது. திருவிழா ஏற்பாடுகளை கோவல் தக்கார் முல்லை, நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.