அனாதைச் சிறுவன் ராம்போலா எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவன். அயோத்தியைச் சேர்ந்த நரஹரிதாஸ் என்ற உபன்யாசகர், சிறுவனின் திறமையை அறிந்து தன் சீடனாக ஏற்றார். வேத சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். சிறுவனுக்கு உபநயனம் (பூணூல் அணிவித்தல்) நடத்த எண்ணி ஊராரை அழைத்தார். அவர்களிடம், என் மகன் போன்ற இந்த சிறுவன் அதிபுத்திசாலி. சுபம் மிகுந்த இந்த நேரத்தில் இவனுக்கு தகுந்த பெயரையும் சூட்டப் போகிறேன். பகவான் விஷ்ணுவுக்கு சமர்ப்பித்த துளசியால் சகல பாவமும் நீங்கி விடும். அதுபோல, எதிர்காலத்தில் இவன் சொல்லும் ஹரி கதைகளைக் கேட்போரும் பாவம் நீங்கி பரிசுத்தம் அடைவர் . அதனால், இவனுக்கு துளசிதாசன் என்று பெயர் சூட்டுகிறேன், என்று வாழ்த்தினார். ஊராரும் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். துளசிதாசன் என்னும் அந்தச் சிறுவனே, பின்னாளில் இந்தியில் ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்றார். ராமசரித மானஸ் என்பது அந்த நுõலின் பெயர்.