திருவாரூர் திருக்கோயிலின் மூலவரான வன்மீகநாதர் கோயிலுக்கு வடமேற்கிலும், கமலாம்பாள் சன்னதிக்கு தென்கிழக்கிலும் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயில் நுழைவுவாயிலின் இடதுபுறம் குனிந்து கும்பிடும் விநாயகர் காட்சி அளிக்கிறார். சற்றே தாழ்வான நிலையில் அமர்ந்திருக்கும் இவரை பக்தர்கள் குனிந்து கும்பிட்டால் தான் முழு உருவத்தையும் வழிபட முடியும். நுழைவுவாயிலின் வலதுபுறம் மகாலட்சுமியின் மூத்த சகோதரியான ஜேஷ்டாதேவி காட்சியளிக்கிறாள். வியாழக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட்டால் பெண்களின் உடற்கூறு உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவளுக்கு களியும், உழுந்தவடையும் நிவேதனம் செய்கின்றனர். ஆலயத்தின் உட்புறம் மங்கண முனிவரால் ஆகம விதிப்படி ஸ்தாபிக்கப்பட்ட ஆனந்தீஸ்வர லிங்கம் அமைந்துள்ளது. ஈசனின் முழு அருளைப்பெற்ற மங்கண முனி ஆனந்த நடனம் ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. இதனைக் கேள்விப்பட சிவன் முனிவர் முன் தோற்றி நடனத்தை நிறுத்துமாறு கூறினார். மேலும் முனிவர் பூஜித்த லிங்கம் ஆனந்த ஈசன் என்ற பெயரால் அழைக்கப்படும் என்றும், திருவாரூருக்கு ஆனந்தபுரம் என்ற பெயர் வழங்கப்படும் என்றும் கூறி மறைந்தார். வைகாசி பவுர்ணமியன்று இங்குள்ள ஆனந்தீஸ்வரரை வழிபட்டால் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை.