கர்நாடக மாநிலம் மடிகேரியிலுள்ளது பாகமண்டலா கிராமம். பாகண்டா என்ற மகரிஷி தன் சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து இங்கு வழிபட்டதால் பாகமண்டலா என்ற பெயர் பெற்றது. சிவனையும், முருகனையும் நினைத்து தவத்தில் ஈடுபட்டிருந்த மகரிஷிக்கு சுப்ரமண்யரும், சிவனும் அருட்காட்சி தந்துள்ளனர். அதன்பின் இருவரது சிலைகளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பாகண்ட மகரிஷி, விநாயகர், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகியோரையும் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்வதென்பது காசி சென்று நீராடுவதற்குச் சமமானதாகும். பித்ருக்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்கின்றனர். காவேரி, கனிகா, ஸயஜோதி என்ற மூன்று ஆறுகளின் சங்கமமே இங்குள்ள திரிவேணி சங்கமம் ஆகும். 14ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஆலயம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த அரசராலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களா<லும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்தலம் கர்நாடகாவில் இருந்தாலும் கேரள முறைப்படியே இங்கு வழிபாடுகள் நடக்கிறது.