பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
11:06
தலைவாசல்: தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்தில், அம்பாயிரம்மன் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரின் இரும்பு சங்கிலி அறுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்தில் உள்ள, வசிஷ்ட நதி கரையில், அம்பாயிரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, தேர்த்திருவிழா கோலாகலமாக துவங்கியது. அப்போது, 20 லட்சம் ரூபாயில் புதிதாக செய்யப்பட்ட, 30 அடி உயர தேரை அலங்காரம் செய்து, பெரியேரி கிராமத்தின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தனர். தேரை இழுப்பதற்காக கட்டப்பட்டிருந்த, இரும்பு சங்கிலி அறுந்ததால், தேர் இழுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின், வேறு ஒரு இரும்பு சங்கிலி மற்றும் வடக்கயிறு கட்டி, தேர் இழுத்து வந்தனர். ஒரு வழியாக, தேர் கோவிலை வந்தடைந்தது. இதில், தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* அதேபோல், ஆத்தூர், காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், வைகாசி மாத கோவில் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், விமான அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்தனர். இரவு, 9 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில், வான வேடிக்கைகளுடன், முத்து மாரியம்மன் ஸ்வாமி அலங்கரித்து ஊர்வலமாக சென்றனர்.