பதிவு செய்த நாள்
07
ஜூலை
2011
10:07
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களின் உணவு வசதிக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று திறந்து வைக்கிறார்.
பக்தர்களின் உணவு பிரச்னையை கவனத்தில் கொண்ட திருப்பதி தேவஸ்தானம், இலவசமாக உணவு வழங்கும் திட்டம் ஒன்றை துவக்கியது. 1985ம் ஆண்டு ஏப்ரல் 6ல், திருமலையில் இலவச நித்ய அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது, தினமும் 2,000 பக்தர்களுக்கு மட்டும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் முதலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களின் உணவு வசதிக்காக, கோவிலின் உள்ளே சில மணி நேரங்கள் மட்டும் இலவச உணவு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இலவச உணவு திட்டத்திற்கு ஏராளமான தொழிலதிபர்களும், பக்தர்களும் பெருமளவில் தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதால், தற்போது நித்ய அன்னதான டிரஸ்டின் கணக்கில், 275 கோடி ரூபாய் டெபாசிட் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் 12 மணி நேரம் பக்தர்களுக்கு இடைவிடாமல் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள உணவு வளாகத்தில், அதிக அளவிலான பக்தர்கள் உணவு சாப்பிட வசதியில்லை. இதனால், நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் இந்த சிறிய குறையை போக்க, 32 கோடி ரூபாய் செலவில், புதிய அன்னதான வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில், வட மாநில பக்தர்களின் வசதிக்காக ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகளை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. "தரிகொண்டா வெங்கமாம்பா தாயார் நித்ய அன்னதான வளாகம் என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடத்தை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று திறந்து வைக்கிறார். அவர் இங்கு தனது குடும்பத்தினருடன் உணவு அருந்தவும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் முதன் முதலாக, 2008 ஜூலை 7 அன்று திருமலைக்கு வந்திருந்து, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலை தொடங்கி வைத்தார். அன்று தனது திருமண நாளையும் கொண்டாடும் விதத்தில் வெங்கடேச பெருமாளை குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.