பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
போர்த் தெய்வமாகவும், வெற்றியை அளிக்கும் தெய்வமாகவும் இருப்பவர் பைரவர். புராணத்தில் அவரைப் பற்றிக் காணப்படும் செய்திகள். முதல் நிலையில் பைரவர் என்பது சிவபெருமானையே குறிக்கிறது. அவர் கொள்ளும் வைரவ வடிவம் அதியுன்னதமானது. அது யாராலும் வெல்ல முடியாத, வீரர்களை அழித்து அவர்களுக்கு அருள்புரிய மேற்கொள்ளும் வடிவமாகும். அவர் அனேக சமயங்களில் அரக்கர்களை அழிக்க பைரவ கோலத்துடன் வெளிப்பட்டுள்ளார். அச்சம் தரும் கோலத்தில் திகழும் அவரையே மகாபைரவர் என்கிறோம். பைரவம் என்ற சொல்லுக்கு அச்சமும் அருளும் தருபவன் என்ற பொருள். இதுவரை எண்ணில்லாத அரக்கர்களை அழிக்க அவர் எண்ணில்லாத முறை பைரவனாக வெளிப்பட்டு, அவர்களை அழித்ததுடன் அவர்களுக்கு அருளும் புரிந்துள்ளார். அவ்வளவு வடிவங்களையும் நாம் போற்றி வணங்க முடியாது என்பதால் அவற்றில் முதன்மை பெற்ற எட்டு வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுகிறோம்.
இவற்றையே அஷ்டமகா பைரவர் என்று அழைக்கிறோம். இவை முறையே காலசம்ஹாரர் (யமை அழித்தவர்) கஜசம்ஹாரர் (யானையை உரித்தவர்) காமதகனர் (காமனைக் கனலால் எரித்தவர்) ஜலந்தரவதர் (ஜலந்தரனைப் பிளந்தவர்). திரிபுராந்தகர் (முப்புராதிகளை எரித்தவர்), அந்தகாசுரசம்ஹாரர் (அந்தகனை வதைத்தவர்) பிரமசிர கண்டீசர்(பிரம்மன் தலையை வெட்டியவர்) என்னும் எட்டாகும். இவையாவும் சிவபெருமானின் மகாபரைவ கோலங்களேயாகும். ஆதியில் உருட்டுப் பார்வை, தெற்றுப்பல்கொண்ட வடிவங்களாகவே அமைத்து வழிபடப்பட்டன. கால ஓட்டத்தில் அன்பர்கள் இவர்களின் உக்ரகோலத்தை மாற்றி அழகியமுகம் கொண்டவர்களாக அமைத்து வழிபடுகின்றனர்.
அப்பர் யானையை உரித்த கஜசம்ஹார மூர்த்தியை வெளிப்படையாக கோகால பைரவர் என்று துதிக்கின்றார்.
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை.
தரித்ததோர் கோல கால வைரவன் ஆகி வேழம்.
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
என்பது அப்பர்சுவாமிகள் திருவாக்காகும். பிரம்மனின் சிரத்தை வெட்டி வீழ்த்திய கோலமும், வைரவராகப் போற்றப்படுகிறது.
வழுவூரில் உள்ள கஜசம்ஹாரர் வடிவில் அவர் பைரவர் என்பதைக் காட்ட கையில் சூலம் கபாலமும், வாய் இதழ் ஓரங்களில் தெற்றிப் பல்லும் காட்டப்பட்டிருப்பது இங்கே சிந்திக்கத்தக்கதாகும். திருக்கோயிலூரில் அந்தகாசுரசம்ஹாரர் பைரவராகவே அமைக்கப்பட்டுள்ளார். திருவிற்குடி தலத்தில் அமைந்துள்ள ஜலந்தரர் வடிவமும் பைரவர் என்பதைக் காட்ட கோரைப் பல்லுடன் அமைக்கப்பட்டிருப்பது இங்கே சிந்திக்கத்தக்கதாகும்.
சிவபெருமான் கொண்ட பைரவ வடிவம் பார்ப்பதற்கு அச்சம் தருவதாக இருந்தாலும் பகைவர்களைத் தண்டித்த பின் அவர்களுக்கு அருள்புரியும் கோலமாகவே இருக்கிறது. அருளும் கோலத்தில் அவர் அமைதி தவழும் முகத்துடன் காணப்படுகிறார். அவர் பகைவர்க்கும் அருளும் தன்மையால் தட்சனைத் தண்டித்தபின் தலையை இழந்த அவனுக்கு ஆட்டுத் தலையை அளித்துச் சிவகணங்களின் தலைவனாக்கினார்.
அந்தகனைச் சூலத்தில் தொங்கவிட்டு வதைத்தபின் அழகிய வடிவம் கொடுத்து பிருங்கிடி என்னும் பெயருடன் கணங்களின் தலைவனாக்கினார். காமனைக் கண் அழலால் எரித்தபின் அவனை அனங்கனாக எழுப்பி, முன்போல் காதலின் கடவுளாக இருக்கும்படிச் செய்தார்.
திரிபுராதிகளை எரித்து அழித்தபின் அவர்களை உயிர்ப்பித்து அவர்களில் தாரகன், வித்யுன்மாலி ஆகிய இருவரை வாயிற்காவலானாகவும் கமலாட்சனை குடழுழா ழுழுக்கும் பணியாளனாகவும் அமர்த்தினார். இப்படியே பைரவ கோலத்துடன் வெளிப்பட்டு அரக்கர்களை அழித்தபின் அவர்களுக்கு அருளும் செய்துள்ளார். அச்சத்தை ஏற்படுத்தி அருள் வழங்கும் அவரது தன்மையை.
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள். அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே. என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்துள்ளார். முதல் நிலையில் சிவபெருமானே அச்சம் தரும் மூர்த்தியாக பைரவனாக வெளிப்படுகிறார். பின்னர் அவரே அளப்பரிய வரங்களைத் தரும்வரதான மூர்த்தியாகும் இருக்கிறார். அருள்தரும் இந்த எட்டு எட்டு வீரட்டகாச மூர்த்திகளும் மகாபைரவர்கள் என்றும் இவர்களது வடிவங்கள் அஷ்டமகா பைரவ வடிவங்கள் என்றும் போற்றப்படுகின்றனர். மேலும் சிவபெருமான் தன்னிட மிருந்து பைரவர் என்ற குமாரனைத் தோற்றுவித்துப் பகைவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும்படி ஆனை கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. சூரபத்மனை அழிக்கச் சுப்பிரமணியரையும், கஜமுகாசுரனை அழிக்கச் விநாயகப் பெருமானையும், தட்சயாகத்தை அழிக்க வீரபத்திரரையும் அனுப்பியதைப் போலவே கண்ணுக்குப் புலப்படாத மாயா அசுர சங்காரத்திற்காக வைரவப்பெருமானைப் படைத்து அனுப்பியதாகவும் கூறுகின்றனர். விநாயகரை மூத்த பிள்ளையார் என்று அழைப்பதைப் போலவே, இவரை உக்ரப் பிள்ளையார் என்றும் கோபப் பிள்ளையார் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானின் அஷ்ட பரிவாரங்களில் ஒருவராக இருப்பவர் இவரே.
இரண்டாவது நிலையில் நாம் போற்றும் அஷ்ட பைரவர்கள் சிவபெருமானின் யுத்த சேனாதிபதிகள். அந்தகாசுர வதத்தின் போது சிவபெருமான் எட்டு வீரர்களைத் தோற்றுவித்தார், சிலர் ஆதியில் காளியை அடக்க சிவபெருமான் எட்டுக் குழந்தைகளை உற்பவித்தார் என்றும், அவர்களுக்குப் பாலபைரவர் என்பது பெயர் என்றும் கூறுவர். அந்த பால பைரவர்களையே சிவபெருமான் அந்தகாசுர வதத்தின்போது அழைத்து வலிய உடலையும் ஆயுதங்களையும் அளித்துப் படைத் தலைவர்களாக்கிப் போருக்கு அனுப்பி வைத்தார் என்றும் கூறுகின்றனர். இவர்களே நாம் போற்றும் 1. அஜிதாங்க பைரவர், 2. ருருபைரவர் 3. சண்டபைரவர், 4. குரோத பைரவர் 5. பீஷண பைரவர், 6. உன்மத்த பைரவர், 7. கபால பைரவர், 8. சங்கார பைரவர் எனும் எண்மராவர். இவர்களையே நாம் அஷ்டபைரவர்கள் என்று போற்றுகின்றோம்.
இவர்களை முதன்மைத் தெய்வமாக வைத்து வழிபடும் வழக்கமில்லை. பரிவார தெய்வமாகவே வைத்து வழிபடுகிறோம். பைரவச் சக்கரங்களில் இவர்கள் மூன்றாவது ஆவரணத்தில் பூசிக்கப்படுகின்றனர். முருகப் பெருமானுக்கு நவவீரர்களும், லலிதாம்பிகைக்கு நவதுர்க்கைகளும், மகாகாளிக்கு அஷ்டகாளிகளும் படைத்தலைவர்களாக இருப்பதைப் போல சிவபெருமான் பைரவராகக் கோலம் கொண்டு அசுரர்களை அழிக்கச் சொல்லும் போது இவர்கள் சேனாதிபதிகளாக இருந்து படைநடத்திச் செல்லுகின்றனர். என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், யுத்தம் புரியும் வேளையில் இவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடமிருந்து எண்மரை உருவாக்குகின்றனர். அந்த எண்மர் குழுவுக்கு அவர்கள் தலைமை தாங்குகின்றனர். இப்படி எட்டு பைரவர்களும் எட்டுக் குழுக்களாக இயங்குவர். இக்குழுக்களில் எட்டு எட்டு பேராக மொத்தம் அறுபத்து நான்கு பைரவர்கள் உள்ளனர். இந்த அறுபத்து நான்கு பேர்களே சதுஷ்சஷ்டி கணபைரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த பைரவர்களுக்குத் தேவியராக அறுபத்து நான்கு யோகினிகள் இருக்கின்றனர். அஷ்டபைரவர்கள் அந்தகாசுர வதத்தின்போது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அஷ்ட மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, கவுரி கை (எ) சண்டிகை ஆகிய எண்மரை மணந்தனர். அறுபத்து நான்கு துணை பைரவர்களும் திவ்ய யோகினி முதலான அறுபத்து நான்கு யோகினியரோடு காட்சி தருகின்றனர். பைரவச் சக்கரங்களில் ஏழாவது ஆவரணத்தில் அஷ்டாஷ்ட பைரவர்களும், அஷ்டாஷ்ட யோகினிகளும், பூசிக்கப்படுகின்றனர். சாக்த நூல்களில் சிவபெருமான் மகாபைரவனாகவும், அவனது தேவியைத் திரிபுர பைரவியாகவும், அஷ்டபைரவர் முதன்மைச் சேனாதிபதிகளாவும், அஷ்டாஷ்ட யோகினியரை படைத் தலைவர்களாகவும் போற்றி வழிபடுகின்றனர். சிவபெருமானைச் சட்டநாதனாக வழிபடும் வேளையிலும் அஷ்ட பைரவர்களைத் துணை தெய்வமாக வழிபடுகின்றனர். அஷ்டபைரவர் வழிபாடு, அஷ்டாஷ்ட பைரவர் வழிபாடு என்பவை துணைத் தெய்வ நிலையில் உள்ள வழிபாடு ஆகும். இவர்களை வழிபடுவதால், பகைவர்கள் அழிவர். மன நிம்மதியும் வாழ்வில் வளமும் உண்டாகும்.