பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
09:06
அஷ்டமி திதியா, விலக்கி விடு என்று கூறுவது வழக்கம் அல்லவா? ஆனால் அத்திதியில் நடந்தேறிய நிகழ்வுகளை நினைக்கையில், துன்பம், தீமைகள் அகன்று, இன்பமும், நன்மையும் விளைந்த ஒரு நல்ல நாளாகவே அது விளங்குவதை அறியலாம். கோகுலாஷ்டமி, துர்காஷ்டமி, பீஷ்மாஷ்டமி, ஸ்ரீகால பைரவாஷ்டமி ஆகிய நிகழ்வுகள் அனைத்தும் அஷ்டமி திதிக்கு உரிய சில முக்கிய விழாக்கள், இவை ஒவ்வொன்றுக்குப் பின்பும் புராண நிகழ்வு ஒன்றுள்ளது. அதுபோலவே, சோகத்தைக் களைந்து மனதில் மகிழ்ச்சியை நிலை நிறுத்துவதால் இத் திதி அசோகாஷ்டமி (அசோகம்+அஷ்டமி) என்றும் அறியப்படுகிறது. அன்று ஈஸ்வரனையும், காளிதேவியையும் ஒருசேர வழிபடும் விழாவாக விளங்குகிறது. இதற்குரியப் புராணச் சம்பவமும் ஒன்றுண்டு.
இலங்கை யுத்தம் முடிந்து நாடு திரும்புகையில் ஜானகி ராமன் கால் பதித்த ஓரிரு இடங்களில் இந்த லிங்கராஜ் கோயிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அசோகாஷ்டமி ஒடிஷா, மேற்குவங்கம், திரிபுரா, ஆகிய கீழை மாநிலங்களில் வசந்த நவராத்திரி, அனுசரிக்கப்படும் சமயம் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவற்றில் முக்கிய இடம் பெறுகிறது. - பூரி ரதயாத்திரையை அடுத்து புவனேஸ்வர் லிங்கராஜ் கோயிலில், ராம பிரானுடன் சம்பந்தமுடையதும், அவரே முன்நின்று நடத்தி வைப்பதாக அறியப்படும் சரித்திரப் பிரசித்துப் பெற்றதுமான ரதோற்சவம் ஆகும். சிவனின் திருமேனி ஒரு மாமரத்தின் கீழ் சுயம்புவாகத் தோன்றியதால் இவ்விடம் ஏகாம்பர (மாமரம்) க்ஷேத்திரம் என்றும் விண்ணுலகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாய் விளங்குவதால் இங்கு ஈசன், கீர்த்திவாசன், திரிபுவனேஸ்வரன் என்றும், அம்பாள் புவனேஸ்வரி என்றும் போற்றப்படுகின்றனர்.
தலபுராணம் 1 : இலங்காபுரியில் ராம - ராவணன் யுத்தம் நடந்த நேரம் எவ்வளவு தீவிர மாய்ப் போரிட்டும் ராம ரால் ராவணனை வீழ்த்த முடியவில்லை. உடல் தளர்ந்து, மனம் சோர்வடைந்த நிலையிலிருந்த தசரதக்குமாரனைக் கண்ட விபீஷ்ணன், பிரபோ!, இப் பின்னடைவுக்குக் காரணம் எனது சகோதரனைக் காளி தேவி அரணாக இருந்து ரட்சிப்பதுதான், அந்தச் சக்தியைத் திசை திருப்ப ஒரே வழிதான் உண்டு. அதைக் காளி தேவி மூலமாகவே வலுவிழக்க வைக்க அவளைத் தீவிரமாய் உபாசனை செய்வதே சரியான முறையாகும். என்றுரைத்தவன் அதற்குரிய உபாயத்தையும் விவரித்தான்.
ஏகாம்பர க்ஷேத்திரத்தில் உறையும் பொன்னார் மேனியன் லிங்கராஜரையும், புவனேஸ்வரியாய் உடனிருக்கும் சக்தி தேவியையும் ஆராதிக்க வழிகாட்டினான். அதன்படி ராமரும் கலிங்க தேசத்து லிங்கராஜ் கோயில் துர்கா தேவியை ஏழு நாட்கள் இடைவிடாமல் தொழுதார். அடுத்த அஷ்டமி திதியன்று அவருக்குத் துர்கையின் முழு அருள் கிடைத்தது. அதர்ம வழியில் நடந்தவனை அதுவரை அரணாகக் காத்து வந்த சக்தி வலுவிழந்தது. புதுபலத்துடன் திரும்பிய ராமர் ராவணனை எதிர்கொண்டு, பிரம்மாஸ்திரத்தால் வீழ்த்தி வெற்றி கொண்டார்.
அவ்வெற்றிக்குக் காரணமான லிங்கராஜ், சதி தேவிக்கு விழாவெடுக்க எண்ணினார். தன் இடர், சோகம் களைந்த பங்குனி மாதம் (வட இந்திய மாநிலங்களில் சித்திரை ) வளர்பிறை அஷ்டமி திதியில் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள். சந்திரசேகரர், துர்காதேவியையும் சப்பரத்தில் இருத்தி, ஏகாம்பர க்ஷேத்திரத்தைச் சுற்றி வந்து தன் மகிழ்ச்சி, நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியை இன்றளவும் அசோகாஷ்டமி ரதோற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றையத் தேரோட்டத்தில் கலந்து கொள்வோரின் மனக்குறைகள், இன்னல்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் என்று நம்புகின்றனர்.
சப்தமி இரவில் ரதம் சுத்திகரிக்கப்பட்டு அர்த்த சந்திரக் கொடி ஏற்றப்படும். அப்போது, அருகிலிருக்கும் முக்தேஸ்வர் கோயில் மரீசி குண்டத்தில் (குளம்) குழந்தை பேறின்றித் தவிக்கும் பெண்கள் நடுநிசியில் நீராடினால், அவர்களின் மலட்டுத் தன்மை அறவே நீங்கிப் பிறவிப் பயன் பெறுவர் என்பது அசையாத நம்பிக்கை, நிதரிசன உண்மையும் கூட.
அசோகாஷ்டமி நண்பகலில், தேவதலனா ரதத்தின் மத்தியில் ருக்மணி துர்கை உருவாக நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், சூலங்கள் ஏந்தியும், அவளுக்கு வலப்பக்கம் சந்திரசேகரர் அபயஹஸ்தம் காட்டி, பரசு, மான் ஏந்தியும், இடப்புறம் வசுதேவர், என்கிற மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், கதை, பத்மம் வைத்தவாறு அமர்ந்திருக்க, சாரதி பிரம்மா ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோயிலுக்கு ஒட்டிச் சென்று அவருக்கு அருளுவதாக ஐதீகம் அங்கு நான்கு நாட்கள் தங்கி, இளைப்பாறி ஆராதிக்கப்படுவர்.
தன்னை அலட்சியப்படுத்தி ருக்மணியை அழைத்துப் போனதற்காகக் கோபமுற்ற உமையாள் அங்கு வந்த ஈசனுடன் வாதாடி, ரதத்திலிருந்து ஒரு சிறு பகுதியைப் பெயர்த்து எடுத்து வரும் ஊடல் நிகழ்ச்சி மூன்றாம் நாள் நடைபெறும். ஐந்தாம் நாள், மூர்த்திகளை மட்டும் ரதத்தில் திருப்பி அமர்த்தி வைத்துப் பின்புறமாகவே ஸ்ரீராமனுக்குத் தரிசனம் அளித்தவாறே ரதம் இழுத்து வரப்படுவது வித்தியாசமானதாகும்!
தெய்வத் திருமேனிகள் கோயில் திரும்புகையில், கோபம் தணியாத பார்வதி தேவி கோபுரக் கதவை அடைத்து விட, அர்ச்சகர்களும், பட்டர்களும், சீதாதேவியைப் பிரிந்து வாடும் ராமருக்கு அருளவே ஈசன் சென்றதாகவும், உமையொருபாகனாக விளங்குபவரின் மீது சினம் கொள்வது ஏற்புடையது அல்ல! என்று சமாதானப்படுத்தும் நிகழ்வும், பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாயும், கலகலப்பு மூட்டுவதாயும் இருக்கும்!
தலபுராணம் 2: கோயிலுக்கு வடதிசையில் அனந்த வசுதேவர் என்கிற கிருஷ்ணர், பலராமர் கோயிலுக்குக் கிழக்குப் பகுதியில் 1300 அடி நீளம், 700 அடி அகலமும் கொண்ட பரந்து, விரிந்த பிந்துசரோவர் (ஏரி) அமைந்துள்ளது. ஒரு சிறு தீவு போலுள்ள இதன் மத்தியில் அநேக சிறிய கோயில்கள் உள்ளன. இதில நீராடுவது புண்ணியம் வாய்ந்ததாகவும் உடல் உபாதைகளைக் களைவதாகவும் கருதப்படுகிறது.
காசி நகரை விடத் தனக்கு மிகவும் பிடித்தாமனது ஏகாம்பர க்ஷேத்திரமே என்ற மகேசனின் கூற்றில் அப்படி என்ன விசேஷமுள்ளது என்பதை அறிய, பார்வதி தேவி ஓர் இடைச்சியாக இவ்விடம் வருகிறாள். அவள் அழகில் மயங்கி, கொண்ட கிருதி, வாசன் எனும் இரு அசுரர்கள் அவளை மணம் புரிய விரும்புகின்றனர். மறுப்புத் தெரிவித்த போதிலும் விடாமல் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு பார்வதி தேவி புத்தி புகட்ட எண்ணினாள்.
சமயோஜிதமாய் யோசித்து தன்னை அவர்கள் தோள் மீது ஏற்றித் தூக்கிச் செல்லுமாறு பணித்தாள். அசுரர்களும் விருப்பமுடன் முன் வந்து அதேமாதிரி செய்தனர். உடனே தேவி அவர்களைப் பூமியில் அழுத்தி வதம் செய்து விடுகிறாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட அடங்கா தாகத்தைத் தீர்த்து வைக்க அழல்வண்ணன், பல்வேறு நதிகளிலிருந்து சில துளி (பிந்து) நீரை அங்கு பாயச் செய்து பிந்து சரோவர் ஏரியை உருவாக்கினார். தானும் அவ்விடத்திலேயே கிருதி, வாசன் என்ற இரு அசுரர்களை வதம் செய்த சதியின் பதி கீர்த்திவாசனாக அமர்ந்து அருள் புரியலானார். சைதன்ய மகாப்பிரபு இச் சரோவரில் நீராடி லிங்கராஜை வழிபட்டிருக்கிறார்.
கலிங்க கட்டிடப் பாணியில் செந்நிற மணற்கற்கள் கொண்டு, வியத்தகு சிற்ப வேலைப்பாட்டுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. 180 அடி நெடிதுயர்ந்து கூம்பு வடிவ தேன்கூடு போன்ற அமைப்பைப் பெற்ற கோபுத்துடன் கீழ்திசைப் பார்த்துக் கம்பீரமாய் நிற்கிறது. வாயிற்கதவுகள் சந்தன மரத்தால் ஆனது. ஒருபக்கக் கதவில் ஈசனின் திரிசூலமும், மற்றதில் விஷ்ணுவின் சக்கராயுதமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் சூலமோ, சக்கரமோ வைக்கப்படாமல் சிவனின் பினாகா தனுஷ், அரைபாதி சக்கர வடிவில் அமைக்கபட்டு அதில் கோயில்க் கொடி பறக்கிறது. காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் பற்பல தெய்வங்களின் சன்னிதிகள்.
ஹரிஹரன் என்றழைக்கப்படும் லிங்கராஜரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. இங்கும் நுழைவாயிலின் இருபுறமும் சூலம், சக்கரம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஜய விஜய, சண்ட - பிரசண்டன் என்கிற துவாரபாலகர்களுக்கு மாற்றாக, ஜயா-பிரசண்டன் இங்குக் காவல் காக்கின்றனர். மூலஸ்தானத்தில் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட மேடையில், அழகிய ஆவுடையார் மீது கிரானைட் கல்லினாலான வியப்பிலாழ்த்தும் சுயம்பு லிங்கத் திருமேனி! தினமும் பால், ஜலம் மற்றும் பங்கி எனும் லாகிரிப் பொருள் கொண்டு செய்த பாங் கலவை ஆகியவற்றினால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. ஒரு பாதி சிவ ரூபமாகவும், மறுபாதி விஷ்ணு வடிவமாகவும் அலங்கரிக்கப்பட்டு ஹரி-ஹரா என்று ஆராதிக்கப்படுகிறது. வில்வம், துளசி, புஷ்பங்களைக் கொண்டே ஹரிஹரன் அர்ச்சிக்கப்படுகிறார் என்பது மற்றொரு சிறப்பு.
நடைதிறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 3.30 மணி முதல் 9.00 மணி வரை.
செல்லும் வழி : புவனேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து 5 கீ.மி. டவுன் பஸ், ஆட்டோ வசதி உண்டு.