பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமென்பர். அதை உலகோர்க்கெல்லாம் உணர்த்தும் விதமாக திருமால் மண்ணுலகில் தோன்றி கோயில்கொண்டுள்ள தலம் பந்தர்பூர். தண்டகாரண்யத்தில் வசித்துவந்த ஜென்மதேவ்சத்தியவதி தம்பதிக்கு புண்டரீகன் என்னும் மகன் இருந்தான். திருமணமாகும்வரை பெற்றோரை மதித்துவந்த அவன் திருமணத்துக்குப்பின் மனம் மாறினான். தாய்-தந்தையரை கொடுமைப்படுத்தலானான். மனம் வெறுத்துப்போன அவர்கள் காசிக்குச் சென்று தங்கள் இறுதிக்காலத்தை முடித்துக்கொள்ளலாமென்று எண்ணினர். இதையறிந்த புண்டரீகன். தானும் தன் மனைவியும் காசிவரை துணைக்கு வருவதாகச் சொல்லி அவர்களுடன் புறப்பட்டான். செல்லும் வழியிலும் அவனது கொடுமை தொடர்ந்து. இடையில் குக்குடேஸ்வரர் என்னும் துறவியின் ஆசிரமத்தில் ஓரிரவு தங்கினர். பொழுது விடியும் நேரத்தில் சில பெண்கள் முனிவரின் ஆசிரமத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருப்பதை புண்டரீகன் பார்த்தான். வேலை தொடங்கும்போது பார்க்க சகிக்காதவர்களாக இருந்த அந்தப் பெண்கள், செய்து முடித்தபோது பேரழகிகளாக விளங்கினர். இதைக்கண்டு வியந்த புண்டரீகன் அவர்களிடம் சென்று நீங்களெல்லாம் யார்? இங்கு நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை! என்றான்.
அதற்கு ஒரு பெண், நான் கங்கை, இவர்களெல்லாம் யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள். மக்கள் தாங்கள் செய்த பாவங்களையெல்லாம் எங்களைப் போன்ற புனித நதிகளில் நீராடி கரைத்துவிடுகிறார்கள். அந்த பாவங்கள் எங்களைப் பற்றிக்கொள்வதால் நாங்கள் குரூபிகளாகிவிடுகிறோம். பெரும் தவசீலரான இந்த முனிவரின் ஆசிரமத்தை தூய்மை செய்வதன்மூலம் எங்கள் பாவங்கள் நீங்கி சுயவடிவம் பெறுகிறோம். தாய்-தந்தை சேவையை தலையாய கடமையாகச் கொண்டதாலேயே இந்த முனிவருக்கு எங்களையே தூய்மையாக்கும் தவ வலிமை உண்டானது. பெற்றோர் சேவையே பெரிது. அதைத் தவறாமல் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று கூறி மறைந்தனர். புண்டரீகன் மனம் மாறினான். தன் தாய் - தந்தையரின் பாதங்களில் விழுந்து வணங்கி அதுவரை தான் நடந்துகொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டான். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு தண்டகாரண்யம் திரும்பிய அவன், பெற்றோர் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தான்.
இதைக்கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு அவன் இல்லம் தேடிவந்து, வாசலில் நின்றவண்ணம் அவனை அழைத்தார். அப்போது தாய் தந்தைக்கு சேவை செய்துகொண்டிருந்த புண்டரீகன் ஒரு கல்லை எடுத்து வெளியில் போட்டு, இதன்மீது கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருங்கள். சேவை முடித்து விட்டு வந்துவிடுகிறேன் என்றான். அவன் வரும்வரை இடுப்பில் கைவைத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார் மகாவிஷ்ணு பின்னர் வந்த மகாவிஷ்ணுவை வணங்கிய அவன், இதேகோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களுக்கெல்லாம் அருளவேண்டும். என்று வேண்ட மகிழ்வுடன் கோயில் கொண்டார் மகாவிஷ்ணு அவரே பண்டரிபுரம் (பந்தர்பூர்) விட்டலன். இக்கோயிலில் ருக்மணி சமேதராக பாண்டுரங்க விட்டலன் கருவறையில் அருள் புரிய, சத்யபாமா, பலராமர், ஜாமவந்தி, ராதை ஆகியோர் தனிச்சன்னிதிகளில் விளங்குகின்றனர். இத்தலத்தில் வாழ்ந்து முக்தியடைந்த துக்காராம், நாமதேவர், நரஹிரிஜி, ராங்கா பாங்கா போன்றோருக்கும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. கோயில் அருகே சந்திரபாகா நதி செல்கிறது. இங்கே கருவறையிலுள்ள விட்டலநாதனின் பாதங்களை பக்தர்களே தொட்டு வணங்கலாம். இத்தகைய வழிபாட்டு முறையுள்ள விஷ்ணு தலம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். ஆடி மற்றும் கார்த்திகை ஏகாதசி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் நடந்தேவந்து தரிசித்துச் செல்கின்றனர். ஜாதகத்தில் சுகாதிபதி கெட்டவர்கள். சூரிய தோஷம் உள்ளவர்கள். பெருமளவில் இங்குவந்து வழிபட்டு நலம்பெறுகின்றனர். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான பந்தர்பூர் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில் வழியில் ஷோலாப்பூர் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 65 கிலோமீட்டர் பயணித்தால் பந்தர்பூரை அடையலாம்.