திருமால் பலமுறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பற்பல அவதாரங்கள் செய்து அவர்கள் தம் குறைகளை நீக்கி அருள் புரிந்திருக்கிறார். அவ்வகையிலே அமைந்ததுதான் பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடப்பதே வழக்கமாக இருக்கும் காலத்தில் இறந்த அசுரர்களை அசுரகுல குருவான சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அசுரர் களை உயிர்ப் பித்து வந்தார். அதனால் தேவர்களுக்கு அந்தச் சலுகை இல்லாது போயிற்று. இதற்கிடையில் அப்போது இந்திரனாக இருந்த மந்தரத்து துருமன் என்பவன் தேவலோகத்தில் யானை மீது வலம் வந்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த தூர்வாச முனிவர்தான் (பிரசாதமாகச்) சிவனிடமிருந்துப் பெற்ற மாலையை இந்திரனுக்கு அணிவித்தார். இந்திரன் அதை மதியாது யானை மீது விசி எறிய யானையும் தன் துதிக்கையினால் அதை எடுத்து காலில் போட்டுத் துவைத்துச் சிதைத்தது. அது கண்ட துர்வாசரும் இந்திரனால் மூவுலகும் அவனும் பாழாகட்டும் எனச் சபித்தார்.
அன்றிலிருந்து தேவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தனர். அதற்குத் தீர்வுகாண தேவர்கள் பிரம்ம தேவனை நாடிய பொழுது அவர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாளுடை நாயகனாகிய ஸ்ரீமந்நாராயணனை அணுகும்படி பணித்தார். அவ்வாறே தேவர்களும் திருமாலை அணுகித் தம் குறைகளைக் கூறினர். அப்பொழுது துளபணிமார்பழகன் இப்போதைக்கு அசுரர்களுடன் வேறுபாடு காட்டாது. சமாதானமாகப் போங்கள், நாம் நாடும் ஒரு பொருளை அடைய வேண்டுமானால் எதிரிகளையும் அணுக வேண்டியிருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து, பாற்கடலில் பற்பல மூலிகைகளையிட்டு மந்திரமலையையும் மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பை நாணாக்கிக் கடையுங்கள். அப்பொழுது அமுதம் கிடைக்கும். அதை நீங்கள் அருந்தினால் நீடித்த இளமையும் ஆயுளும் கிடைக்கும் என்றார்.
மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிராகவும் கடலில் பொருத்தி திருமாலும் தேவர்களும் ஒரு பக்கமும் மறு பக்கம் வாலியும் கடைய, அலைகள் மேலெழுந்து வரும் கடல், வட்டமாகச் சுழலும் வேகத்தால் திமிதி மித்தெம் என தாள ஓசையுடன் அலைகளும் கூடவே சுழல என்று எவ்வாறு கடலைக் கடைந்தனர் என்பதை திருப்புகழ் பாடலில் விவரிக்கிறார். கனைகடல் எனும் திருப்புகழ் பாடலில்.
பேரிரைச்சல் போடுகின்ற அலைகள் மிகுந்த கடல் குழம்பி வாயில் நுரை தள்ளுமாறு. மேருமலை மத்தென கம்பமாக நடப்பட்டு, தீப்பொறி பறக்கும் விஷத்தையுடைய வாசுகி என்ற விஷத்தினையுடைய படங்களுடன் கூடிய வாசுகி என்ற பாம்பைக் கடைத்தாம்பாகச் செய்து முறையாக தேவர்கள் அமுது உண்ணுமாறு கடலைக் கடைந்த திருமால் என்று திருமால் புகழ் பாடுகிறார்.
மேலும் மாடமதில் என்னும் திருப்புகழிலும் இந்தச் சேதியைச் சொல்கிறார்.
மேருமலையை பெரிய மத்தாகவும் வாசுகியைக் கடைத்தாம்பாகவும் இணைத்து வலிமை மிக்கவானோர்கள் கடைய கடலில் புகையோட தீ தழும்பும் படி கொதித்து புலம்பு அமுதத்தை அளித்து தேவர்களை மகிழ்வித்த திருமால்.
நாராயணன் கூறியபடி அசுரர்களும் தேவர்களும் மந்திர மலையைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தனர். இடையேகளைப் படைந்த காரணத்தால் கீழே வைத்த போது அது பலரைத் தாக்கிக் கொன்றது. பாண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்டோனான் ஸ்ரீமன்நாராயணன் கீழே கிடந்த மலையை தூக்கிக் கருடன் மேல் வைத்துத் தானும் ஏறிப் பறந்து கடலில் வைத்து விட்டார். பின்னர் கடலைக் கடைவதற்காக. வாசுகியின் தலைப்பக்கம் நிற்கையில் நாராயணன் தலைப்பக்கம் உள்ளான் என்றால் ஏதோ சூட்சமம் இருக்கிறது என்று எண்ணி தேவர்களுடன் பல வாக்கு வாதம் செய்த பின் அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கம் நின்று கடையத் தீர்மானித்தனர். திருமாலும் தம் எண்ணம் நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் தேவர்களுடன் வாசுகியின் வால்பக்கம் நிற்க பின் இருதரப்பினரும் பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.
பாற்கடலைக் கடைந்தபொழுது மந்திரமலை பாரம் தாங்காது கடலில் அமிழ்ந்து விட்டது அருகில் இருந்த திருமால் .உடனே ஆமை உருவம் எடுத்து கடலின் ஆழத்தில் சென்று தன் வலிமையான ஓட்டினால் மலையைத் தாங்கிப் பிடித்து அமுதம் கடைவதற்கு ஏதுவாக உதவி புரிந்தார். இதை அருணகிரிநாதர் குமரகுருபர - எனும் திருப்புகழ் பாடலில் அழகாகப் பொருள் பட விளக்குகிறார்.
அதாவது ஒலிமிகுந்த அலைகள் வீசும் சங்குகளைக் கொண்ட கடலின் குடல் போன்ற நடுப்பகுதி சுழற்சிப் பெற்ற விஷத்தை ஆறுபோல கக்குகின்றன. அனேக முகங்களையுடையதும், திரண்ட படங்களையுடையதுமான நீண்ட கடைக்கயிறாய் வாசுகி பாம்பை உபயோகிக்க அனைத்து உலகங்களும் சாய்ந்து விடாது ஒரே இடத்தில் நிலையாகயிருக்கும்படி பொருத்தப்பபட்ட பொன்நிற மந்திரமலையை மத்தாகச் சுழலும் நேரத்தில் தேவர்களும் அசுரர்களும் கைதளர்வடைந்தபோது ஒப்பற்ற இனிய அமுதத்தினை தான் ஒருவனே நின்று கடைந்து (மந்தரமலை சாயாமல் நிற்பதற்கு திருமால் கூர்மாவதாரம் எடுத்து தன் ஆயிரம் கைகளால் பிடித்துக் கொண்டதன் பொருள்பட) தேவர்கள் பசியைத் தீர்த்தார் என்று விளக்கிறார்.
வேறு ஒரு திருப்புகழிலும் (அடைபடாது) இதே கருத்து வரும்படிப் பாடியிருக்கிறார்.
இவ்வாறாகப் பாற்கடலைக் கடைந்தவுடன் முதலில் விஷம் வெளிப்பட்டு அதனை சிவபிரான் ஏற்ற தன்மிடற்றில் அடக்கிக் கொண்டபின் முதலில் காமதேனு லட்சுமி தருக்கள் போன்ற பலவகையான பொருட்கள் வெளிவந்தன. இதையே அருணகிரிநாதரும் - ஈரமொடு சிரித்து எனும் பாடலில்.
பார மேருப ருப்பத மத்தென நேரி தாக எடுத்துட னட்டுமை பாகரார படப்பணி சுற்றிடு பாதி வாலியி டித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷ்மி பாரிசாதமு கற்பல சித்திகள் கீர வாரிதி யைக் கடைவித்ததி காரியாயமு ததைய ளித்தக்ரு பாளுவாகிய பச்சுரு வச்சுதன்
பாரமான மேருமலையை மத்தாக இட்டும், சிவனின் ஆபரணமான பாம்பைக் கயிறாகப்பிடித்தும், பாற் கடலைக் கடையும்போது லட்சுமியும், காமதேனும், பஞ்சதருக்களும், அமுதமும் கிட்டவே தலைவனாக முன் நின்று தேவர்களுக்கு அமுதத்தைப் பகிர்ந்தளித்த மகா விஷ்ணு என்று எவ்வாறு திருமால் தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார் என்று விவரிக்கின்றார். இறுதியாக தன்வந்திரி பகவான் அமுதம் ததும்பும் கலசத்துடன் கடலினின்றும் வெளிவந்தார். அதைக் கண்ட அசுரர்கள் அவரிடமிருந்த கலசத்தைப் பறித்துச் சென்று விட்டனர். திருமாலின் அவதாரம் இந்த அவதாரத்தோடு நின்றுவிடவில்லை. அமுதகலசத்தைப் பறித்துச் சென்ற அசுரர்களிடமிருந்து அதை மீட்கவே நெடும்புயல் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடமிருந்து அதை மீட்டு வந்து தேவர்களிடம் கொடுத்தார்.
இவ்வாறு கூர்மாவதாரம் மோகினி அவதாரத்துடன் இணைந்து ஒரே அவதாரமாகக் கருதப்படுகிறது. சீரார் திருப்புகழை செவ்வேள் மேல் அன்பாய ஆராய்ந்துரைத்த அருணகிரியார் இன்நிகழ்ச்சிகளை வேடர் செழும் திணை என்ற திருப்புகழ் பாடல் மூலம் அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றார்.
இவ்வாறு அநேக சமயங்களில் தேவர்களின் குறை தீர்த்து அவர்களுக்கு நீண்ட வாழ்வு அமைய உதவிய திருமாலின் பெருமைகளைத் திருப்புகழினூடே வெகுவாகக் கண்டு மகிழலாம்.