பதிவு செய்த நாள்
24
ஜூன்
2015
12:06
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில், ராகு - கேது பரிகார கோவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில், மாஸ்டர் பிளானை செயல்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், ராகு - கேது பரிகார பூஜைகள், இனிமேல் கோவிலுக்குள் நடக்காது.
இதுகுறித்து, கோவில் செயல் அதிகாரி ராமிரெட்டி கூறியதாவது: காளஹஸ்தி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில், அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆலோசனைப்படி, மாட வீதியை அகலப்படுத்த, சுற்றியுள்ள கட்டடங்கள், கடைகள், அகற்றப்பட உள்ளன. கோவிலுக்குள் உள்ள அன்னதான மண்டபம், தலைமை அலுவலகம், ஞானபிரசுனாம்பா, திரிநேத்திரி விருந்தினர் மாளிகை, கோசாலை ஆகியவை அகற்றப்பட்டு, கோவிலில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள, பரத்வாஜ தீர்த்தம் அருகில் ஏற்படுத்தப்படும்.
சொர்ணமுகி நதியில், கழிவுநீர் சேராதபடி தடுத்து, பக்தர்கள் புனித நீராட வசதியாக, சிறிய
நீர்தேக்கம் அமைக்கப்படும். இனி, அனைத்து விதமான ராகு - கேது பரிகார பூஜைகள்,
கோவிலுக்குள் நடத்தாமல், கோவில் வெளியில் உள்ள மண்டபத்தில் நடத்தப்படும். இதன் மூலம், ஒரே நேரத்தில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், பூஜையில் பங்கேற்பார்கள்.
மாஸ்டர் பிளானை செயல்படுத்த, கோவிலில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஐதராபாத்தில்
பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.